Wiki

 

கம்பியில்லா வலைப்பின்னல் அமைப்பு (Wireless computer networking)

என் வலைப்பதிவில் டிசம்பர் 2003-ல் நான் எழுதிய தொடரின் தொகுப்பு:

(முன்னுரைக்கும் முன்னுரை: ‘வலைப்பின்னல் அமைப்பில் கம்பியில்லாத் தொடர்பு’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரைத் தொடர் செய்யலாம் என்று ஆசை. இந்த விஷயத்தில் என் அனுபவத்தை பதிக்கும் விதமாய் இதை நான் முயலுகிறேன்.

‘பிறநாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்’ என்றான் பாரதி. இன்றைக்கு ஒரு சாதாரண அறிவியல் தொழில்நுட்ப விஷயத்தை தமிழில் எழுதுவதில் உள்ள சிரமங்கள், அனுகூலங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள ஒரு சோதனை ஓட்டமாயும் இது எனக்குப் பயன்படப் போகிறது. பார்க்கலாம்.)

முன்னுரை

அன்று ஒரு நாள் Broadband Wireless Router ஒன்றை வாங்கியதில் கிடைத்த அனுபவங்களை (லாபங்களையும்!) எழுதியிருந்தேன். ஒரு ஆர்வத்தில் அதை வாங்கப் போய் அதில் உள்ள தொழில்நுட்ப சமாச்சாரங்களில் லயித்துப் போய் நிறையத் தெரிந்தும் கொண்டேன். அதில் சிலதை இங்கு பதிக்கிறேன், இதில் புதிதாய் ஈடுபடுபவர்களுக்கு ஏதாவது பிரயோசனப்படும் என்பதால்.

இந்த ரவுடரை வாங்குவதற்கு முன் ரவுடர் என்றால் என்ன, ஸ்விட்ச் என்றால் என்ன என்பதை அறியாத நிலையில் நான் இருந்தேன் என்பதாலும், இன்று அவற்றை உணர்ந்து அன்றாடம் பயன்படுத்தும் நிலைக்கு முன்னேறி இருக்கிறேன் என்பதாலும், இதை எழுதத் துணிந்தேன். இது ஒரு பயனரின் அனுபவப் பகிர்வு. திறனாய்வு அல்ல. எனவே இதில் வரும் எதையும் ஒவ்வொருவரும் ஆய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். மேலும் அனைத்தும் விண்டோஸ் வகைக் கணிகளே நான் பயன்படுத்தியவை. மற்றவற்றைப் பற்றி நான் அறிந்தது பெரிய பூஜ்ஜியம்.

நான் இங்கு சொல்வது ஒரு இல்லம்/சிறுஅலுவலகம் ஆகிய இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணினிகளை வலைப்பின்னல் முறையில் இணைப்பதுபற்றி. குறிப்பாக, ஒரு அதிவேக இணையத்தொடர்பை (டி.எஸ்.எல் அல்லது கேபிள்) ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கணினிகள் பயன்படுத்தும் விதமாய், அதிலும் சிறப்பாக அந்தக் கணினிகளில் ஒன்றாவது கம்பியில்லாமல் மற்ற கணினிகளுடன் மற்றும் இணையத்துடன் தொடர்பு கொள்ளும் விதமாய் அமையும் வலைப்பின்னல் பற்றி. உதாரணத்திற்கு என் இல்லத்தில் இரு மேசைக் கணினிகளையும் அவ்வப்போது ஒரு மடிக்கணினியையும் பயன்படுத்துகிறோம். இங்கு சொல்லப்படும் முறையில் நான் அடையும் பலன்கள்:

  • வாடகை வீடானபடியால் உள்ளடங்கிய கம்பிகளை பயன்படுத்த முடியாது. குறுக்கும் நெடுக்குமாய் வீட்டுக்குள் கம்பிகளை யார் விரும்புவர்? இப்போது அனைத்தும் கம்பியில்லாத் தொடர்பானதால் இந்தத் தொல்லையில்லை.
  • மடிக்கணினியின் உண்மையான கையோடு எடுக்கும் தன்மை (மொபிலிட்டி) அதனுடன் எந்த கம்பியும் இனைக்காமல் இருக்கும்போதுதான் முழுதாய் உணரப்படுகிறது. இதன் மூலம் அது சாத்தியமாகிறது
  • மேலும் நான் சிலநாட்கள் முன்பு வரை பெருமைக்காக சட்டைப்பையில் சுமந்த பைக்கணினியும் (பாக்கட்பிசி) அவ்வப்போது மற்ற கணினிகளுடன் பேசவும், இணையத்துடன் இணையவும் முடிந்தது.

முன்னுரை ஆயிற்று. இனி பொருளடக்கம். இந்தக் கட்டுரைத்தொடரை நான் மூன்று பாகங்களாகச் செய்யலாம் என்று இருக்கிறேன். அவை: பாகம் -1

  • 1.1 வலைப் பின்னல்களின் வகைகள்
  • 1.2 கம்பியில்லாத்தொடர்பு முறைகள்
  • 1.3 802.11b என்று சொல்லப் படுகிற WiFi என்று குறுக்கப்படுகிற இன்றைக்குப் பிரபலமான முறை
  • 1.4 வலைப் பின்னலின் அத்தியாவசிய பாகங்கள்

பாகம் -2

  • 2.1 ரவுடரின் வகைகள், முக்கியமான குணாதியங்கள்
  • 2.2 அடாப்டர் வகைகள், எதில் என்ன அனுகூலம், என்ன பிரச்னை
  • 2.3 ஒரு வலைப்பின்னல் அமைப்பின் மாதிரி

பாகம் -3

  • 3.1 மென்பொருள் நிறுவுதல், மற்றும் ஆட்சிமை
  • 3.2 பாதுகாப்பு முறைகள் - அவசியம் மற்றும் வகைகள்
  • 3.3 கருவிகள் வாங்கும் போது முக்கியமாய்க் கவனிக்க வேண்டுவன.

1.1 வலைப் பின்னல்களின் வகைகள்

1.1.1. வலைப்பின்னலுக்கான முதல் தேவை - அடாப்டர்:

இன்று இல்லம் அல்லது சிறு அலுவலகக் கணிகளை வலைப் பின்னல்கள் மூலம் இணைப்பது ஒரு பயனரே செய்யக் கூடியதாய் இருக்கின்றது. எந்த வொரு கணினியும் வலைப்பின்னலில் பங்கேற்க வேண்டுமென்றால் முதலில் தேவைப் படுவது ‘நெட்வொர்க் அடாப்டர்’ என்ற வலைப்பின்னல் கருவி. எளிமை கருதி இது இனி ‘அடாப்டர்’ என்று அழைக்கப்படும். பெரும்பாலும் கணினியின் மேசைக் கணினியின் பிசிஐ குழியில் செருகிகொள்ளும் விதமாய் இவை கிடைக்கின்றன. மற்ற வடிவங்களைப் பின்னால் பார்க்கலாம். நவீனக் கணினிகள் பலவற்றில் தனியாக அடாப்டர் இல்லாமாலேயே இந்த வசதி மெயின் போர்டிலேயே அமையப் பெற்று வருகின்றன. இந்த முதல்வகை அடாப்டர்கள் கம்பிவழி வலைப் பின்னல் வசதிக்கானவை. கம்பியில்லாத் தொடர்புக்கான அடாப்டர்களைப் பின்னால் பார்க்கலாம்.

1.1.2. நேரடி இணைப்பு வலைப்பின்னல் (Peer-to-peer Networking)

நான் முதன் முதலில் அமைத்த வலைப் பின்னல் இரு சமனிலைக் கணினிகளுக்கு இடையிலான நேரடி இணைப்பு. என்னிடம் அப்போது இரு மேசைக் கணினிகள் மட்டும் இருந்தன. இரு கணினிகளிலும் அடாப்டர் பொருத்தப்பட்டவுடன் மேலதிகமாய் ஒரே ஒரு குறுக்காய் இணைத்த பின்னல் கம்பி (cross-linked network cable) மட்டுமே நான் வாங்கவேண்டியிருந்தது. வெறும் இரண்டு கணினிகளை இணைக்கவேண்டியிருந்தால் இது சிக்கனமான முறை.

ஆனால் இதன் குறைபாடு, இணையத் தொடர்பைப் பகிர்வதில் உள்ளது. இரண்டில் ஒன்றின் இணையத் தொடர்பு இருந்தால், மற்றொன்று அதை எளிதில் பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால் இணையத் தொடர்பு உள்ள கணினி இயங்குவதை நிறுத்திவிட்டால் அடுத்த கணினியின் இணையத் தொடர்பும் அறுபட்டுவிடும். ஆனால்எந்தவொரு கணினியுடன் இணைக்கப்பட்ட அச்சு இயந்திரத்தை மற்றோரு கணினியும் பங்குபோட்டுக் கொள்ள முடியும். ஒரு கணினியின் கடினவட்டில் உள்ள கோப்புகளை அடுத்த கணினி எட்ட முடியும்.

இதே நேரடி இணைப்பு முறை கம்பியில்லாத் தொடர்பு மூலமும் சாத்தியம். அப்போது இது இடைக்கால இணைப்பு (ad-hoc networking) என்று அழைக்கப்படுகிறது. அதற்கு கம்பியில்லாத் தொடர்புள்ள அடாப்டர் (Wireless network adaptor) தேவை. இணையத் தொடர்பு வசதி உள்ள முதல் கணினி எப்போதும் இயங்கவேண்டியிருப்பது ஒன்றே இந்த முறையின் முக்கியக் குறைபாடு. இரண்டுக்கும் மேற்பட்ட கணினிகளை இணைக்க மேலும் அடாப்டர்(கள்) தேவைப்படுவது இரண்டாவது குறை. ரவுடர் அல்லது ஸ்விட்ச் இந்தக் குறைகளை நிவர்த்திக்க வருகிறது.

1.1.3 குறுகிய எல்லை வலைப் பின்னல் (Local Area Networking)

இன்றைக்குப் பெரும்பாலும் உபயோகத்தில் இருப்பது இம்முறையே. அதிலும் தொழில் நிறுவனங்களில் இது மட்டுமே கோலோச்சுகிறது என்று சொல்லலாம். இங்கு ஒரு பரவலான வலைப்பின்னலில் பலவகைப்பட்ட கனினிகள் இணைக்கப் படுகின்றன. தேவைக்கேற்ப அச்சு இயந்திரங்கள், ·பைல் சர்வர்கள், போன்றவையும் இணைக்கப் படுகின்றன. இல்லம்/சிறுஅலுவலக அளவில் இந்த முறையின் முக்கியத் தேவை ஏற்கனவே சொன்னதுபோல எந்த ஒரு கணீனியும் இணைஉயத்தொடர்புக்காக இன்னொரு கனீனியைச் சாராதிருக்க, மற்றும் இரண்டுக்கும் மேற்பட்ட கணினிகளை எளிதாய் இணைக்க. இதற்கு குறைந்த பட்சத் தேவை நெட்வொர்க் ஸ்விட்ச், (இனி எளிதாய் ‘ஸ்விட்ச்’). இணையத் தொடர்போடு கூடிய பின்னலானால் நெட்வொர்க் ரவுடர் (இனி எளிதாய் ‘ரவுடர்’) தேவைப் படும். ஸ்விட்ச் மட்டும் இருந்தால் இணையத் தொடர்பை பகிர்வது பாதிக்கப்படும் என்பதால் ரவுடரே இங்கு தேவைப்படுகிறது. ஒவ்வொரு கணினியிலிருந்தும் கம்பி மூலம் இந்த ரவுடருக்கு இணைப்புக் கொடுக்கப்படும். பொதுவான இணையத்தொடர்பும் இந்த ரவுடருக்கு வந்து சேரும். இந்த ரவுடர் தன்னுள் ஒரு ஸ்விட்ச்சையும் கொண்டிருப்பதால் கணினிகளுக்கிடையில் தொடர்பை ஏற்படுத்தவும், கணினிகளுக்கும் இணையத்திற்கும் தொடர்பை ஏற்படுத்தவும் ஏதுவாகிறது. கம்பியில்லாத் தொடர்பு என்று வரும்போது, இது கட்டமைப்பு வலைப்பின்னல் (Infrastructure Networking) எனப்படுகிறது.

1.2. கம்பியில்லாத் தொடர்பு முறைகள்

மின்னணு சாதனங்களில் பல வகையான கம்பியில்லாத் தொடர்பு முறைகள் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றை முதன்மையாக ஒளியினால் இயங்குபவை மற்றும் மின்காந்த அலைகளால் இயங்குபவை என வகைப் படுத்தலாம். உதாரணமாய் தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கும் கைக்கருவி (அகச்சிவப்பு) ஒளியினால் இயங்குகிறது. பலவகை கம்பியில்லாத் தொலைபேசிகள் மின்காந்த அலைகளால் இயங்குகின்றன. கணினியுலகில் வலைப்பின்னலில் மின்காந்த அலைகளே அதிகம் பயனாகின்றன. மிக முக்கியமான வெளிப்படையான காரணம், ஒளியினால் இயங்கும் எதுவும் தடுப்புச் சுவரை தாண்டிச் செல்ல முடியாததுதான்.

செல்பேசிகளை விட்டுவிட்டுப் பார்த்தால் மின்காந்த அலையினால் இயங்கும் முறைகள் இருவகைப்படும். ஒன்று புளூடூத் எனப்படுவது. இது கிட்டத்தில் உள்ள கருவிகளை, குறைந்த சக்தி கொண்டு இணைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. உதாரணமாய், ஒரு ஒலிஎழுப்பி/ ஒலிவாங்கி அமைந்த தலைக்கருவி, சட்டைப் பையில் அல்லது கைப்பையில் உள்ள செல்பேசியுடன் கம்பியில்லாமல் தொடர்பு கொள்ள இது பயன்படுகிறது.

புளூடூத் வெளிவந்தபோது எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போதும், காலப்போக்கில் அது அவ்வளவாக பிரபலம் அடையவில்லை. சாதாரணமாய் இதன் வீச்சு 10 மீட்டர் (சுமார் 30 அடி) அளவே. பைக்கும் தலைக்கும் இதுவே அதிகம் தானே:-)

1.3. 802.11x வரிசை முறைகள்

மிஞ்சி ராஜாவாக நிற்பது நம் 802.11 வரிசை முன்காந்த இணைப்பு முறைகள். புகழ்பெற்ற IEEE அமைப்பினால் தகுதரப்படுத்தப்பட்ட இந்த முறையில் a, b மற்றும் g என்ற மூன்று துணைமுறைகள் உள்ளன. இவற்றில் மிகவும் பிரபலமானது 802.11b என்ற முறை. இசைக்கருவிகளில் தரமானவற்றை ஹை-·பை (HiFi - High Fidelity) என்று குறிப்பதைப் போல், இந்த 802.11b முறையில் இயங்கும் தொடர்பை வை-·பை (WiFi - Wireless Fidelity தான் என்று உறுதியாகக் கூறமுடியவில்லை) என்று குறிக்கிறார்கள் (குறுக்குகிறார்கள்!)

மூன்று முறைகளின் சாதக-பாதகங்களை இங்கு ஒப்புநோக்கலாம்:

மேற்கண்ட பட்டியலில் இருந்து 802.11g முறை எல்லாவற்றிலும் மேலானது என்பது தெரியும். ஆனாலும் இன்றைக்கு 802.11b சுலபத்தில் குறைந்த விலையில் கிடைக்கிறது. மேலும், இணையத் தொடர்பைப் பகிர்தல் மட்டுமே முக்கியக் குறிக்கோள் என்றால், 802.11gயின் அதிவேகம் பயன்படுத்தப்படாத வசதியாய்த் தூங்கிக் கிடக்க வாய்ப்புள்ளது. இரு கணினிகளுக்கிடையில் தரவுப் பரிமாற்ற வேகம் முக்கியம் என்றால் மட்டும் கொஞ்சம் செல்வானாலும் 802.11gக்குப் போவது உத்தமம்.

இவை சாதாரணமாய் 100-150 அடிவரை நன்கு இயங்கக் கூடியவை. தூரம் அதிகரிக்க அதிகரிக்க, வேகத்தை தானாகவே குறைத்துக் கொள்ளும்விதமாய் இவை அமைக்கப் பட்டுள்ளன. மரத்திலான அமெரிக்க சுவர்களைவிட கான்கிரீட்டில் ஆன இந்தியச் சுவர்களை ஊடுருவ வேண்டி வரும்போது இவற்றின் வீச்சு குறைய வாய்ப்பு இருக்கிறது.

802.11b மற்றும் 802.11g இரண்டுமே இயங்கும் அலைவரிசை 2.4 GHz. இதே அலைவரிசையில் சில கம்பியில்லாத் தொலைபேசிகளும் இயங்கும்போது சில சமயம் குழப்பம் நேருவதாக சிலர் அனுபவம் கூறுகிறது. என் இல்லத்தில் தொலைபேசி 900 MHz-ல் இயங்குவதாலோ என்னவோ எனக்கு எந்தக் குழப்பமும் வரவில்லை.

‘வை·பை ஹாட்ஸ்பாட்ஸ்’ என்று அழைக்கப்படுகிற இடங்கள் இன்று வளர்ந்துவருகின்றன. இவை என்னவென்றால், இங்கெல்லாம் இந்த 802.11b முறையில் இணையத்தொடர்பு ஏற்படுத்தப்பட்டு, இதே முறையில் இயங்கும் கணினியுடன் அங்கு வரும் ஒருவர் சுலபத்தில் இணைப்புப் பெற்று இணையத்தில் உலாவ வழிசெய்கிறது. பெரும் விமான நிலையங்கள், தங்கும் விடுதிகள், மருத்துவ மனைகள், ‘ஸ்டார்பக்ஸ்’ போன்ற காப்பிக்கடைகள் இந்த ஹாட்ஸ்பாட்ஸ் வசதியை ஒரு வியாபார உத்தியாக தங்கள் வாடிக்கையாளருக்கு அளிக்க ஆரம்பித்திருக்கின்றன. உங்கள் ஊருக்கு அருகில் எங்கே ஹாட்ஸ்பாட்ஸ் உள்ளது என்று அறிய இங்கே சொடுக்குங்கள்.

இந்த இணையத்தளத்தின் தகவல்படி, உலகில் இன்று 5000க்கும் மேற்பட்ட ஹாட்ஸ்பாட்ஸ் உள்ளன. இன்றைக்கு நியூயார்க் மானிலத்தில் 472 ஹாட்ஸ்பாட்ஸ் இயங்குகின்றன. ஜெர்மனியில் 114 உள்ளன என்று சொல்கிறது. எங்கள் ரோச்சஸ்டரில் 16 இருக்கின்றதாகச் சொல்கிறது. நான் இந்தக் காப்பிக்கடைகளுக்கெல்லாம் போவதில்லை, எனவே நேரடி அனுபவம் இல்லை.

2.1 ரவுட்டரின் வகைகள், குணாதிசயங்கள்.

2.1.1. ஒரு ரவுட்டரின் முக்கியமான பாகங்கள்

இப்போது கம்பியில்லாத் தொடர்பு வசதிகொண்ட ஒரு சாதாரண ரவுட்டரின் அமைப்பு வரைபடம் வரைந்து பாகங்களைக் குறிப்போம்:

(படத்தைப்பார்த்து பயந்து விட வேண்டாம், தொட்டால் ஷாக்கெல்லாம் அடிக்காது:-) இப்போது ஒவ்வொரு பாகத்தையும் எடுத்துக்கொண்டு அவற்றின் பணிகளைப் பார்ப்போம்.

முதலில், எளிதான ஸ்விட்ச் பாகம்:

1.1.2.-ல் நேரடி இணைப்பு வலைப்பின்னல் (Peer-to-peer Networking) பற்றிப் பார்த்தோம். அது அல்லாமல், இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளைக் கொண்டு வலைப்பின்னல் அமைக்க இந்த ஸ்விட்ச் பயனாகிறது. இதன் மூலம் ஒரு குறுகிய எல்லை வலைப்பின்னல் (LAN) சாத்தியமாகிறது. ஒவ்வொரு கணினியின் நெட்வொர்க் அடாப்டர்களில் இருந்து கம்பிவழியாக இந்த ஸ்விட்ச்சுடன் இணைப்புக் கொடுப்பதன் மூலம் இந்த வலைப் பின்னல் அமைகிறது.

அடுத்து ரேடியோ பாகம்.

கம்பிவழியாக அல்லாமல் இந்த வலைப்பின்னலில் ஒரு கணினியை இணைக்க இந்த ரேடியோ பாகம் பயனாகிறது. தகுந்த கம்பில்லாத் தொடர்பு அடாப்டர்களைக் கொண்ட கணினி இந்த முறையில் இதே வலைப்பின்னலில் பங்கேற்கிறது. இந்த ரேடியோ பாகம் இதற்கு ஒரு அலைபரப்பியை (Transceiver) கொண்டுள்ளது. ஆக இது இரண்டையும் கொண்டு கம்பிவழியாகவும், கம்பி இல்லாமலும் கணினிகளை இணைத்து வலைப் பின்னல் அமைக்க முடிகிறது.

ஆனால் இணையத் தொடர்புக்கு இன்னும் எதையும் செய்யவில்லையே! அதைத்தான் ரவுட்டிங் பாகம் செய்கிறது.

ரவுட்டிங் பாகம்:

இது இணைக்கப்பட்டுள்ள அனைத்துக் கணினிகளுக்கும், நம் கேபிள்/டிஎஸ்எல் மோடெம்-மிலிருந்து வரும் இணையத் தொடர்பின் பயனைத் தருகிறது. இதைச் செய்ய ரவுட்டர் நிறைய மெனக்கெட வேண்டியுள்ளது அவை என்னென்ன என்பதை ரவுட்டரின் குணாதிசயங்களை விளக்கும் போது பார்ப்போம்.

2.1.2 ரவுட்டரின் வகைகள்:

எளிதாய் சொல்வதானால், ரவுட்டர்களை ‘கம்பிவழித் தொடர்புள்ளவை’ (wired), ‘கம்பியில்லாத் தொடர்புள்ளவை’ (wireless) என வகைப்படுத்தலாம். ஆனால், மேலே நாம் பார்த்த வகை ‘கம்பிவழி மற்றும் கம்பியில்லா’ தொடர்புள்ளது. பாதுகாப்பு, எளிமை மற்றும் தரவுப் பரிமாற்ற வேகம் உள்ளிட்ட பல காரணங்களால் இன்னும் ஒரு வலைப்பின்னலில் கம்பிவழித் தொடர்பை முற்றிலும் தவிர்க்க முடியாது. அதிலும் இன்று பெரும்பாலான கணினிகள் உள்ளடங்கிய கம்பிவழித் தொடர்பு வாயிலை இயல்பாகப் பெற்று வருகின்றன. எனவே இவ்வகை ரவுட்டர்களே பெரிதும் விரும்பப்படுகின்றன.

2.1.3 ரவுட்டரின் முக்கிய குணாதிசயங்கள்

வன்பொருளால் ஆன ரவுட்டரின் பாகங்களைப் பார்த்தோம். இனி ரவுட்டரின் மென்பொருள் பாகங்கள். கண்ணுக்குத் தெரிந்த வன்பொருட்களை விட, கண்ணுக்குத் தெரியாத மென்பொருட்கள் செய்யும் வேலை மிக அதிகம்.

DHCP & NAT: (Dynamic Host Control Protocol & Network Address Translation)

இணைய உலகில் எல்லாக் கணினிகளுக்கும் ஒரு அடையாள எண் உண்டு. அதுதான் ஐ.பி முகவரி (I.P. address). பல்லாயிரக்கான கணினிகள் இணையத்தில் பங்கேற்கும்போது ஐ.பி. முகவரி (இனி ‘ஐபி’ என அழைப்போம்) ஒன்றுதான் ‘இந்த வேண்டுகோள், இந்தக் கணினியிடமிருந்து வந்தது’ என்று கண்டு அதற்கான பதிலை சரியான கணினிக்கு கொண்டு சேர்க்க ஏதுவாகிறது. இது பிழையின்றி நடக்க வேண்டுமானால், இந்தப் பூவுலகில் உள்ள ஒவ்வொரு கணினிக்கும் தனிப்பட்ட அடையாளம் வேண்டும். விண்டோஸ்-ஸில் இயங்கும் கணினிகள் ஒரு தனிப்பட்ட ஐபி-யை தன்னுள் பதித்து வைத்திருக்காததால், இணைய சேவை அளிப்போர், நாம் ஒவ்வொரு முறை இணையத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதும் நம் கணீனிக்கு ஒரு ஐபி வந்து சேருமாறு செய்திருக்கிறார்கள். இதை இயங்கு ஐபி (Dynamic IP) எனலாம். இதில் சிலர் நிரந்தர ஐபி-யைக் (Static IP) கொடுத்தாலும், பெரும்பாலும் தற்காலிகமான இயங்கு ஐபி-யையே கொடுக்கிறார்கள்.

ஆக, இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது, ஐபி, இணையத்தில் நம் அடையாள எண், அது இணையச்சேவை அளிப்பவரால் கொடுக்கப்படும் தனிப்பட்ட எண். பார்ப்பதற்கு 209.185.253.167 என்பது போல இருக்கும். உங்கள் ஐபி-யைத் தெரிந்து கொள்ள நிறைய வழிகள் உள்ளன. உதாரணமாய், command prompt விண்டோவில் ipconfig என்ற கட்டளையைக் கொடுத்தால் அது சொல்லும் உங்கள் ஐபியை. அல்லது கீழே உள்ள கட்டத்தில் தெரிகிறதா பாருங்கள்!

இப்படி இணையசேவை அளிப்போர் கொடுக்கும் ஒரே ஒரு ஐபி-யை வைத்துக்கொண்டு எப்படி பல கணினிகளுக்கு இணைய சேவை கொடுப்பது? மேலும், நம் வலைப்பின்னலில் இணைக்கப்பட்டுள்ள மற்ற கணினிகளுக்கு யார் ஐபி கொடுப்பார்கள் (எங்க ஊரில் ஐபி கொடுப்பது என்றால் திவால் ஆவது, அது இல்லை இங்கே;-) இதைத்தான் DHCP மற்றும் NAT மூலம் ரவுட்டர் செய்கிறது.

தன்னுடன் இணைக்கப்பட்ட கணினிகளுக்கு ‘இந்த வலைப்பின்னலின் எல்லைக்குள்’ தனித்துவமான ஐபி முகவரிகளை ரவுட்டர் அளிப்பதை DHCP என சொல்கிறோம். இது பள்ளியில் வகுப்புக்குள் வரிசை எண், அலுவலகத்தில் பணியாளர் எண், போன்று, ஒரு எல்லைக்குள் தனித்துவமானது. அதற்கு வெளியே வந்தால், தனித்துவம் காலி! உதாரணமாய் என் மேசைக்கணினியின் ஐபி 192.168.0.1. இது என் ரவுட்டர் அளித்தது. என் நண்பர் ஒருவரும் இதே ரவுட்டர் வைத்திருக்கிறார், அவரின் கணினிக்கும் அவரின் ரவுட்டர் இதே எண்ணைக் கொடுத்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இதில் இன்னொரு விசேஷம், இந்த Dynamic என்ற முதல் வார்த்தை. இதன் பயன், வலைப் பின்னலில் புதிதாக இணையும் எந்த ஒரு கணினிக்கும் அந்த நொடியிலே இது ஒரு ஐபியை நாமகரணம் செய்யும். இதற்காக ரவுட்டரின் இயக்கத்தையோ, வலைப்பின்னல் இயக்கத்தையோ நிறுத்த வேண்டியதில்லை. மனிதவள அலுவலர் புதிதாய் அலுவலில் சேரும் ஒருவருக்கு புது பணியாளர் எண் அளிக்க, ஆலையை மூடித் திறக்க வேண்டிவந்தால் எப்படி இருக்கும்? ஆனால், இந்த வசதியே சில பாதுகாப்புச் சிக்கல்களுக்கும் வழிவகுக்கும். எப்படி என்பதை பின்னால் பார்ப்போம்.

இப்படி யாருக்கு என்ன ஐபி கொடுத்தோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, அவர்களிடமிருந்து வரும் வேண்டுகோளை இணையத்திற்கு அளித்து, வரும் பதிலை, பழையபடி அவர்களுக்கே அளிப்பதுதான் NAT-டின் வேலை. இணையத்தைப் பொறுத்தவரை நம் வலைப் பின்னலில் உள்ள அனைத்துக் கணினிகளையும் அறியாமல், ரவுட்டரை மட்டும் ஒரு கணினிபோல் பாவிக்கும். அஞ்சல்காரர் நம் அலுவலகத்துக்கு வரும் அனைத்து அஞ்சல்களையும் டெஸ்பாட்ச் கிளார்க்கிடம் கொடுப்பதும், பிறகு அவர் பிரித்து, ஒவ்வொரு மேசையாய் கொடுப்பதும், இதற்கு இணையான செய்கைகள். சொல்லப்போனால் ரவுட்டரின் முதன்மைப்பணி இதுதான். எனக்கு ‘கைகாட்டி’ என்ற சொல்தான் ஞாபகத்திற்கு வருகிறது.

தீயரண் (Firewall)

இன்னொரு முக்கியமான பணி ரவுட்டர் ஒரு வாயிற்காப்பானாகவும் செயல்படுவது. கம்பியில்லாத் தொடர்புக்கென்ற சிறப்பு ஏற்பாடுகளைப் பின்னால் பார்ப்போம். அத்தகைய பாதுகாப்பை ஏற்படுத்தாவிட்டால் நம் வலைப்பின்னலில் யார்வேண்டுமானலும் உள்ளே புகுந்து நாசம் விளைவிக்கவோ நம் இணையசேவையை தன் உபயோகத்திற்குப் பயன்படுத்தவோ வாய்ப்பு இருக்கிறதல்லவா? ஆகவே, அது முக்கியமாக பாகம் 3.2-ல் விவரிக்கப்படும். இந்த ‘தீயரண்’ பொதுவாக எல்லா ரவுட்டர்களும் தரும் பதுகாப்பு.

ஒவ்வொரு வேண்டுகோள் வலைப்பின்னலில் இருந்து வெளி உலகத்துப் போகும்போதும், வரும் பதில் தகவலை ஆரய்ந்து, அது நம் வலைப்பின்னலில் உள்ள ஒரு கணினி கேட்டதற்குப் பதிலாக வருகிறதா, அல்லது தகவல் உருவில் தானாகக் கிளம்பி வந்த ஒன்றா என்று சோதித்தே அனுமதிக்கும் அமைப்பு தீயரண். என் வேலையாளை பக்கத்துக் கடையில் காப்பி வாங்கிவர அனுப்புகிறேன்; அவர் வங்கிக் கொண்டு வரும்போது, என் வாயிற்காப்போன் கதவைத் திறந்து உள்ளே அனுமதிக்கிறார். அப்போது ‘இதுதாண்டா சமயம், கதவு திறந்திருக்கிறதே’ என்று எண்ணி தெருநாயும் உள்ளே வரமுயன்றால் விடுவாரா? தடியால் அடித்துத் துரத்த மாட்டாரா? அதே வேலையைத் தான் தீயரண் செய்கிறது.

UPnP (Universal Plug and Play) இதைப்பற்றி உள்ளே நுழைந்து பார்ப்பது நமக்குத் தேவையில்லாத விஷயம்ம். ஆனால், இந்த வசதி கட்டாயம் தேவைப்படும் வசதி. நான் முதலில் (இலவசமாய்) வாங்கிய அந்த புகழ்மிக்க ரவுட்டரில் இந்த வசதி இல்லை. MSN, யாஹ¥ போன்ற உடனடித் தூதுவன் (instant messenger) வழியாக அரட்டை அடிக்கும்போது, பேசிக் கொல்ல, சாரி, பேசிக் கொள்ள வேண்டுமானால் இந்த வசதி உள்ள ரவுட்டர் தேவைப்படும். இது உள்ள ரவுட்டர் வழியாக இணைக்கப்பட்ட கணினி, கிட்டத்தட்ட நேரடியாக இணையத்தில் இணைந்தது போல எல்லாவிதத்திலும் இயங்குகிறது. வாய்ப் பேச்சுக்கு மட்டுமில்லாமல் இணையம் வழி விளையாடும் சில விளையாட்டுக்களும் UPnP இருந்தால்தான் வேலை செய்யும்.

இதுபோக, இன்னும் VPN Pass-thru, Port-forwarding, Content filtering என்று நிறைய வசதிகளை ரவுட்டர்கள் அளிக்கின்றன. இவற்றை ‘3.3 ரவுட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டுவன’ என்ற தலைப்பில் பார்க்கலாம். இத்தனை எக்கச்சக்கமான விஷயங்களை ரவுட்டர் தன்னுள் அடக்கிக் கொண்டு சத்தம் போடாமல் தேமே என்று மினுக்கி மினிக்கி தான் இயங்குவதைக் காட்டிக் கொண்டிருக்கிறது. அடுத்து, கம்பியில்லாத் தொடர்பு கொண்ட அடாப்டர்களைப் பார்க்கலாம்.

2.2 அடாப்டர் வகைகளும் தேர்வும்

எளிமை கருதி, கம்பியில்லாத் தொடர்புக்கான அடாப்டர்களை மட்டும் இங்கு காண்போம். வேகம்,வீச்சு போன்ற குணாதிசயங்கள் வாரியாகவும் கணினியுடன் பொருத்தும் முறைகள் வாரியாகவும், இவற்றை வகைப்படுத்தலாம்.

2.2.1 குணாதிசயங்கள் வாரியான வகைகள்

குணாதிசயங்கள் வாரியாக வகைப்படுத்தும் போது, பொதுவாக நாம் பார்க்க வேண்டியது, நாம் எந்த வகை வலைப்பின்னல்களில் இதை பங்கேற்கச் செய்யப் போகிறோம் என்பதே. உதாரணமாக, ரவுட்டர் 802.11bயில் இயங்குவதாகக் கொண்டால் அடாப்டரும் அதே முறை அல்லது அதனுடன் ஒத்து இயங்கும் 802.11gயில் இயங்குவதாக இருக்க வேண்டும். சில சமயம் நாம் பொருத்தக்கூடிய கணினி கையோடு எடுத்துச் செல்லும் மடிக்கணினியாகவோ /பைக்கணினியாகவோ /கைக்கணினியாகவோ (Laptop PC / Pocket PC / Handheld PC) இருந்தால், ஒன்றுக்கும் மேற்பட்ட வலைப்பின்னல்களில் (உ.ம். காப்பிக்கடை ஹாட்ஸ்பாட், அல்லது அலுவலக வலைப்பின்னல்) பங்கேற்கவேண்டி வருவதுண்டு. அத்தகைய சூழலில், பலவகைப் பின்னல்களுடன் ஒத்தியங்கும் தன்மை மிக அவசியம்.

இந்த அடிப்படையில் மிகச்சில வகைகளே இருந்தாலும், அடுத்த அடிப்படையில் நிறைய வகைகள் உள்ளன.

2.2.2. பொருத்துமுறை வாரியான வகைகள்

கணினியுடன் பொருத்தும் முறை என்று வரும்போது, கணினியின் வடிவ அமைப்பு (Form factor) ஒரு முக்கிய இடம் பெறுகிறது. சில வகை அடாப்டர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வடிவங்களுக்குப் பொருந்தினாலும், பெரும்பாலும், பொருத்தும் முறையே அடாப்டர்களின் தேர்வில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் என்னென்ன வகைகள் இருக்கின்றன என்று பார்க்கலாம்.

PCMCIA அட்டை வடிவம்

கம்பியில்லாத் தொடர்பு அடாப்டர்களில் முதலில் வெளிவந்ததும் பிரபலமானதும் இதுவே. கையோடு எடுக்கும் தன்மைக்கு மடிக்கணினியே அடையாளம். எனவே அதற்கென அமைந்த இந்த வடிவம் பிரபலமானதில் வியப்பேதும் இல்லை. இந்த வடிவம் எல்லா மடிக்கணினிகளும் உள்ள PCMCIA குழியில் செருகிக் கொள்ளும் விதமாய் உள்ளது. இதில் முக்கால்பாகம் உள்ளே இருந்து, அலைபரப்பியாக இயங்கும் சிறுபகுதி மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். இதை சுருக்கமாக கம்பியில்லா பிசி கார்ட் (Wireless PC card) என்றும் அழைப்பர்.

பொதுவாக மடிக்கணினிக்கென்று வந்தாலும், தகுந்த வடிவமாற்றி கார்டு ஒன்றை (PCI-PCMCIA adaptor) பிசிஐ குழியில் பொருத்துவதன்மூலம், ஒரு மேசைக்கணினிக்கும் இது பயனாகிறது. ஆனால் இது வேலையற்ற வேலை என்பதை எளிதில் உணரலாம். ஏனென்றால் இதைவிட குறைந்தவிலையில் முழு அடாப்டரே பிசிஐ குழியில் பொருத்தக் கூடியவகையில் கிடைக்கும்போது, எதற்கு இந்த பச்சக்குதிரை?

PCI அட்டை வடிவம்

கம்பியில்லாத் தொடர்பு முதலில் பரவிய போது அசையாக் கணினிகளுக்கு யார் இவற்றைப் பயன்படுத்தப் போகிறார் என்று எண்ணியதாலோ என்னவோ, பிசி கார்டு மட்டுமே பிரபலமானது. பிறகு அசையாக் கணினிகளுக்கும் இதன் மூலம் கிடைக்கும் பயன்களை அறிந்து, அங்கும் கம்பியில்லாத் தொடர்பு பிரபலம் ஆனது. அவற்றிற்கான ஒரு வடிவம் தான் இந்த வடிவம். இவற்றில் திசைமாற்றிக் கொள்ளும்படியான அலைபரப்பி அமைந்துள்ளது ஒரு அதிகப்படியான அனுகூலம். ரேடியோ அலைகள் சரியாக எட்டவில்லையென்றால் இந்த அலைபரப்பி சுட்டும் திசையைச் சற்று மாற்றி நம்மால் தொடர்பை மேம்படுத்த முடியும். பெரும்பாலும் எக்கச்சக்கமான மூலைகளில் மேசைகளுக்கு அடியில் கிடக்கும் மேசைக்கணிகளுக்கு இந்த வசதி தேவைதான்.

USB வடிவம்

USB குழியில் துணைக்கருவிகளைப் பொருத்துதல் இப்போது பிரபலமாகிவிட்டது. அச்சு இயந்திரங்கள், வருடிகள், காமிராக்கள், என பலவும் பழைய சீரியல்/பாரல்லெல் வாயில்களில் இருந்து USB வாயிலுக்கு மாறிவருகின்றன. USBயின் இரண்டு முக்கிய அனுகூலங்கள், கணியை மறு-உயிர்ப்பு செய்யாமலேயே எதையும் பொருத்த/பிரிக்க முடிவது; குறைந்த சக்தித் தேவையில் இயங்கும் பல துணைக்கருவிகளுக்கு கணினியே மின்சாரம் அளிக்க முடிவது. இது போன்ற பயன்களால் இன்று எதை எடுத்தாலும் USB என்றாகிவிட்டது. அதே பாணியில் USB அடாப்டரும் வந்தாகிவிட்டது. இது மேசைக்கணினிகளுக்கே பெரிதும் பயனாகும். மடிக்கணினிகளுக்கும் ஆகும் என்றாலும், இவை தளர்வான கம்பிவழியாய் கணினியுடன் இணைக்கப்படுவதால் மடிக்கணினியைத் தூக்கும்போது கூடவே இன்னொரு கையில் இதையும் தூக்கவேண்டி வரும். எதுக்கு ரெட்டை வேலை? மேசைக் கணினியில் பயன் படுத்தும் போது ஒரு அனுகூலம், மூலையில் கணினி கிடந்தாலும், அலைபரப்பியோடு இணைந்த இதை உயரமான, அலை வீச்சு எட்டக் கூடிய இடத்தில் வைக்க முடியும். குறை? உள்ள USB குழிகளில் ஒன்றை இதற்கு நிரந்தரமாகத் தாரை வார்க்க வேண்டும்!

Flash Card வடிவம்

பைக்கணிகள் இன்று பிரபலமாகி வருகின்றன. நானும் இரண்டுவருடமாய் ஒன்றை வைத்திருந்தேன். இப்போது அதை போன விலைக்குத் தள்ளிவிட்டு புதிது வாங்க டீல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்;-) இவற்றின் சிறு வடிவம் பிசி அட்டையை விட சிறிய அடாப்டரை கேட்கிறது. இவற்றிற்கென சிஎ·ப்/எஸ்டி (CF- Compact Flash / SD - Secure Digital) வடிவங்களில் அடாப்டர்கள் வருகின்றன. இந்த சிஎ·ப் வடிவம் ஒன்று என்னிடம் இருக்கிறது.

In-built மற்றும் MiniPCI வடிவம்

சில மடிக்கணினிகளில் ஆக்கிரமிக்கப்படாத Mini PCI குழி ஒன்று இருக்கிறது. வாங்கும்போதே உள்ளடங்கிய கம்பியில்லாத் தொடர்பு வசதியோடு வாங்கும்பட்சத்தில், இந்தக் குழியில் ஒரு சிறு அட்டை வடிவ அடாப்டரைப் பொருத்தி, இதில் இருந்து இரு கம்பிகளை எடுத்து உள்ளடங்கிய அலைபரப்பியுடன் இணைத்துத் தருகிறார்கள். இதன் மூலம் எந்த ஒரு அட்டையயும் சொருகாமலே, எப்போதும் இது தொடர்புக்கு தயாராய் இருக்கும். என் மடிக்கணினித் தயாரிப்பாளர் இதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட டாலர்கள் கேட்டதால், ‘சீசீ இந்தப் பழம் புளிக்கும்’ எனச்சொல்லிவிட்டேன். ஆனாலும் ஆசை யாரைவிட்டது? இந்த வசதி உள்ள மடிக்கணினியில் ஒரு சவுகர்யம், ஒவ்வொரு முறை கணினியை மூடிப் பையில் வைக்கும்போதும், PCMCIA அடாப்டரை கழற்றி/மாட்ட வேண்டிய தொல்லை இருக்காது. மற்றும், அந்தக் குழியும் காலியாக இருந்து வேறு எதற்காவது பயனாகும்.

ஒரு 25 டாலருக்கு வெறும் அட்டையை மட்டும் வாங்கி நானே சொருகிக் கொண்டேன். அலைபரப்பிக்கான கம்பிகள் இல்லாததால், இது முழு வீச்சோடு வேலை செய்யாது என்று தெரிந்தும், முயன்றேன். எனக்கு வியப்பளிக்கும் விதமாய், ஒரே அறையில் உள்ள ரவுட்டரோடு அது சரியாக வேலை செய்கிறது. பக்கத்து அறைக்குப் போனால், கொஞ்சம் வேகத்தைக் குறைத்துக் கொண்டு வேலை செய்கிறது. எனக்கு இது போதுமாய் இருக்கிறது. இன்னும் தூரம் போனால், பைக்குள் இருக்கும் பிசி கார்டை எடுத்து சொருகிக் கொள்ள வேண்டியதுதான். அந்தத் தேவை எனக்கு அவ்வளவாய் இல்லை, எனவே கிடைத்த வரைக்கும் திருப்தி.

ஆக, ரவுட்டர் மற்றும் அடாப்டர்கள் ஓரளவுக்கு தெளிவாகி இருக்கும் என்று நினைக்கிறேன். மேற்கொண்டு ஒரு இல்லவலையின் மாதிரியைப் பார்க்கலாம்.

 
  wireless_networking.txt · Last modified: 2006/09/09 09:14