Wiki

 

வலைப்பதிவுகளை பரவலாக்க சில யோசனைகள்.

தமிழ் வலைப்பதிவுகளுக்கு இன்றைய வாசகர்கள் பாதிப்பேர் இன்னொரு வலைப்பதிவராகத்தான் இருப்பர் என்பது என் அனுமானம். இந்தத் நிலையிலிருந்து பரவலான ‘எழுதுவதைவிட வாசிப்பதில் ஆர்வமுள்ள’ இணைய வாசகர்களுக்கு இவற்றை எடுத்துச்செல்ல வேண்டிய கட்டம் வந்துவிட்டதென நினைக்கிறேன். முன்பு ஒருமுறை
நண்பர் சிலந்தி ரமணிகூட இதைப் பற்றிக்குறிப்பிட்டிருந்தார். இதுவரை இணணயத் தமிழ் ஆர்வலர்கள் புழங்கும் தளங்கள் வாயிலாகவே வலைப்பதிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன (திசைகள், தமிழோவியம், இ-சங்கமம்… யாஹூ குழுமங்கள் போன்றவை). முதலில் இணையத்தில் உலாவுபவர்கள் மட்டத்தில் பரப்பலாம். பிறகே அச்சு வடிவத்தில் தமிழ் வாசிப்போருக்கு இவற்றை எடுத்துச் செல்ல முடியும். அவ்வகையில் எனக்குத் தோன்றிய சில யோசனைகள்:

  • பலரும் வாசிக்கும் இணையத்தளங்களில் கட்டுரைகள் மூலம் அறிமுகப்படுத்தல். இவ்வகையில் நான் எழுதிய ஒரு கட்டுரை தட்ஸ்தமிழ்.காம் தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. இதுபோல இன்னும் சிஃபி.காம், திண்ணை, வெப்உலகம்.காம், அம்பலம்.காம், ஆறாம்திணை, … போன்ற தமிழ்த் தளங்கள், சென்னை ஆன்லைன் போன்ற ஆங்கிலத்தளங்கள், தினமணி, தினமலர், தினத்தந்தி போன்ற நாளிதழ்களின் இணைய வடிவம் இங்கெல்லாம் கட்டுரைகள் வெளியிட முயற்சிக்கலாம். (இது தமிழ்நாட்டுப் பார்வையில் சொல்வது. இன்னும் ஈழத் தமிழர்கள் அதிகம் எழுதும் வாசிக்கும் பல தளங்கள் இருக்கின்றன, அவற்றை இங்கே பட்டியலிட என் அறிவு போதாது)
  • வட அமெரிக்காவில் வெளியாகும் அச்சு இதழ்களான தென்றல், பாக்யா-இளமை-இனிமை-புதுமை போன்றவற்றிலும் வலைப்பதிவுகளைப் பற்றி அறிமுகம், விமர்சனம் ஆகியவை எழுதப்பட முயற்சி செய்யலாம்.
  • தமிழர் பெருமளவில் கூடும் கூட்டங்கள், விழாக்களில் அறிவிப்புகள் செய்யலாம். அறிமுகப்படுத்தலாம். தமிழ்ச் சங்கங்கள் தங்கள் நடவடிக்கைகளை வலைப்பதிவுகள் மூலம் பதிவு செய்ய, அறிவிக்க ஊக்குவிக்கலாம்.

இவை கொஞ்சம் கொஞ்சமாக செய்யப்பட வேண்டியவை. ஆனால் தொடர்ந்து சிறிது சிறிதாக முயற்சிக்கப்பட வேண்டியவை.

 
  tamil_blogs_-_an_intro.txt · Last modified: 2006/09/09 09:14