Wiki
'கேட்காவிட்டாலும் தரப்படும்.' - செஸ்டர் கார்ல்ஸன் (1906-1968)
வாரத்துக்கு 35 டாலர்கள் சம்பளத்தில் தன் முதல் பணியில் சேர்ந்த இயற்பியல் பட்டதாரி செஸ்டர் கார்ல்ஸன், 1968-ல் தன்னுடைய 62ஆம் வயதில் இறக்கும்போது சம்பாதித்திருந்த சொத்தின் மதிப்பு 150 மில்லியன் டாலர்கள். (இன்றைய ரூபாயில் சுமாராக 650 கோடி). இதைவிட சம்பாதித்த பில்கேட்ஸ்களையும் பால் அலன்களையும், ஏன், திருபாய் அம்பானிகளையும், லக்ஷ்மி மித்தல்களையும் கூட நாம் அறிவோம். அதிரடி வணிக நடவடிக்கைகளாலோ சூட்டிப்பான நிர்வாகத்தாலோ அல்லாமல், தன் கூர்மையான புத்துருவாக்கல் முயற்சிகளால், ‘இருந்தும் உணர்ந்துகொள்ளப்படாத’ ஒரு தேவைக்கு விடையாக ஒரு புது நுட்பத்தைக் கண்டுபிடித்தவர்; அதைத் தன் விடாமுயற்சியால் முன்னெடுத்துச் சென்ற சாதனையாளர் கார்ல்ஸன்.
இன்று தெருவுக்குத் தெரு ‘ஜெராக்ஸ்’ என்று கொட்டை எழுத்துக்களில் நம்மை அழைக்கும் நகலகங்கள், சட்டப்படி ஒரு மெல்லிய குற்றமிழைக்கிறார்கள். ஸிராக்ராபி முறையில் நகல் எடுத்துத்தரும் பெட்டிக் கடைகள் செய்யும் தவறு, ஒரு நிறுவனத்திற்கு உரிமையான ‘XEROX’ என்ற பெயரை, பொதுவான செயலுக்குப் பயன்படுத்துவது. ஆனால் அவர்கள் அறிந்து செய்வதில்லை. ‘ஒளிநகலாக்கம்’ என்ற பொதுவான செயலுக்கு ஆங்கிலப்பெயர் ‘XEROX’ என்று எண்ணிச் செய்கிறார்கள். இப்படி அந்த நுட்பத்தோடு பிரிக்கமுடியாமல் ஒன்றிப்போன அந்த ஸிராக்ஸ் நிறுவனத்தின் கதாநாயகன் கார்ல்ஸன்.
1968-ல் அவர் இறக்கும்போது ஸிராக்ஸ் நிறுவனத்தின் வருட விற்பனை ஒரு பில்லியன் டாலரை (இன்றைய ரூபாயில் சுமார் 4300 கோடி) எட்டியிருந்தாலும், 1938 அக்டோபரில் அவர் கண்டுபிடித்த ஒளிநகலாக்க நுட்பம் ஒரு முழுக் கருவியாக உருப்பெற்று சந்தைக்கு வர 21 வருடங்கள் பிடித்தன என்றால் விந்தையாக இருக்கிறது. காரணம்?
அமெரிக்காவில் சியாட்டலில் ஒரு நாவிதரின் ஒரே மகனாகப் பிறந்த கார்ல்ஸன் 14 வயதிலிருந்தே குடும்பச் சுமையை தாங்கவேண்டியிருந்தது. சிறுவனாக இருந்தபோதே ஏன், எதற்கு, எப்படி என்று கேட்கும், அறிந்துகொள்ளும் ஆர்வம் கார்ல்ஸனுக்கு இயல்பாக அமைந்திருந்தது. சிறு அச்சகத்தில் பகுதிநேர வேலை பார்க்கும்பொதே அச்சும், மையும், தாளும் அவற்றுடன் பிணைந்த வரைகலை, வேதிமங்கள் பற்றிய அறிவும் அவரின் மனதில் ஆழமான தாக்கத்தை உண்டாக்கியிருக்கவேண்டும்.
பல அமெரிக்க மாணவர்களைப் போலவே தன் உழைப்பிலேயே பொருளீட்டி மேற்கொண்டு கல்வி கற்று இயற்பியலில் பட்டமும் பெற்று நியூயார்க் நகரின் புகழ்பெற்ற ‘பெல் டெலிபோன் லாபரட்டரீஸ்’ நிறுவனத்தில் ஆராய்ச்சிப் பொறியாளராக பணிக்கு சேர்ந்தார். 83 நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து, இரண்டே இடங்களில் பதில் வரப்பெற்றுக் கிடைத்த இந்த வேலையும், அப்போது அமெரிக்காவைத் தாக்கிய பெரும் பணவீழ்ச்சி காரணமாக கைநழுவிப் போனது.
மீண்டும் அலைந்து திரிந்து காப்புரிமைச் சேவை அளிக்கும் வழக்கறிஞரிடம், பின் மின்னணுவியல் நிறுவனத்தில், என்று வேலையில் ஒட்டிக்கொண்டே சட்டம் பயின்றார். இன்னொரு காப்புரிமை வழக்கறிஞரிடம் மேலாளர் பணிக்கு வந்தும் வாழ்க்கை இன்னும் அவருக்கு இனிக்கவில்லை.
கார்ல்ஸன் சொல்கிறார்:
வேலை என்று ஒன்று இருந்தது, ஆனாலும் நான் வேகமாக முன்னேறுகிறேன் என்று எண்ணவில்லை. கல்யாணமானவன்; சம்பாதிப்பது கைக்கும் வாய்க்குமாக எத்தனைநாள் போராடுவது? ஏன் எதையாவது புதிதாகக் கண்டுபிடிக்கக் கூடாது என்று சிந்தித்தேன். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தமாதிரி, இதனால் இந்த உலகிற்கும் எதாவது செய்தவனாவேன், எனக்கும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்...
கண்டுபிடிப்புக்காக முருகனாக மயிலேறிப் போய்த் தேடாமல் விநாயகனாக இருந்த இடத்திலேயே யோசிக்கலானார். காப்புரிமைச் சேவை நிறுவனத்தில் என்றைக்குமே கார்பன் காப்பிகளுக்குப் பற்றாக்குறைதான். நகலெடுக்க இரு வழிகள்தான் இருந்தன. பெரும் செலவில் நிழற்படங்களாக எடுக்கவேண்டும், அல்லது முழு ஆவணத்தையும் ஒருவர் மீண்டும் தட்டச்சிட்டு அதை ஒருவர் சரிபார்த்து… ‘ஹும், எளிதாக நகலெடுக்க ஒரு வழியும் இல்லையா?’ கார்ல்ஸன் மனம் சிந்தித்தது. சில நொடியில் நகலெடுக்க ஒரு கருவி மட்டும் செய்ய முடிந்தால், அலுவலகங்கள் எங்கும் அதற்குத் தேவை இருக்குமே!.
‘தேவை’ ஒன்று மனதில் பளிச்சிட்டதும், அதற்கான விடைகளைத் தேடியலைந்தார். நியூயார்க் பொது நூலகத்தில் பிம்பவியல் சம்பந்தப்பட்ட நூல்களில் ஆழ்ந்து தன் மாலைப் பொழுதுகளைக் கழித்தார். அப்போது ‘என் வழி, தனி வழி’ என்று அவர் தேர்ந்தெடுத்த பாதை மிகவும் முக்கியமானது. ஒளியால் வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வழமையான நிழற்படவியலை விடுத்து வேறு வழியில் பயணித்தார். அதற்கு அவர் கருதிய காரணம், அந்தத் துறையில் ஏற்கனவே ஈடுபட்டுள்ள பெரும் நிறுவனங்களின் ஆராய்ச்சி மையங்களோடு தனியொரு மனிதனாகப் போட்டிபோட முடியாது என்பதே.
தன் உள்ளுணர்வு பணித்தவாறு மாற்று வழிகளைத் தேடியவருக்கு ஒளியால் தூண்டப்படும் மின்கடத்திகள் பற்றிய ஆய்வுகளில் விடை இருப்பதாகத் தோன்றியது. இந்த முக்கிய முடிவைப் பற்றி பிறகு சொன்னார்: ' யோசனைகள் சட்டென்று மூளையில் உதிப்பதில்லை. மனத்தைத் தூண்டும் சிந்தனைகள் பெரும்பாலும் எங்கிருந்தோ கிட்டுகின்றன. அநேகமாக வேறு எதையாவது பற்றிப் படிக்கும்போது…’
பொறி தட்டியதும் காரியத்தில் இறங்கினார். நியூயார்க் ஜாக்சன் ஹைட்ஸ் பகுதியில் தன் அடுக்ககத்தின் சமையலறையிலேயே அவரது புதிய உலகிற்கான அடிப்படைக் கோட்பாடுகள் உருப்பெற்றன. அவர் அந்தப் புதுமையான முறைக்கு மின்நிழற்படவியல் என்று பெயரிட்டார். காப்புரிமை சேவைகளில் உழன்றதாலோ என்னவோ உடனே, 1937-ல், தன் கண்டுபிடிப்புகளை காப்புரிமைக்கும் சமர்ப்பித்தார். ஆனாலும் இன்னும் இந்தக் கோட்பாடுகளை ஒரு கருவியாக உருவாக்கும் பெரும் சவாலைத் தன்னால் எதிர்கொள்ள முடியுமா என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டார்.
மூட்டு வலியால் அவதிப்பட ஆரம்பித்திருந்த கார்ல்ஸன் இனியும் நேரம் கடத்தாமல் தன்னிடம் மிச்சமிருந்த பணத்தையும் போட்டு, ஓட்டோ கார்னை என்ற ஒரு உதவியாளரையும் பணிக்கு அமர்த்திக்கொண்டு அஸ்டோரியா என்ற இடத்தில், தான் கண்டுபிடித்த கோட்பாட்டை செய்முறையாக்குவதில் தீவிரமாக இறங்கினார். ஒளியியல் மூலம் அவர் வாழ்வில் ஒளியேற்றிய அந்தப் பொன்னான நேரத்தைப் பற்றி கார்ல்ஸன் சொல்கிறார்:

அன்று நான் ஆய்வகத்துக்குப் போன போது, புதிதாக கந்தகம் பூசப்பட்ட ஒரு துத்தநாகத் தகட்டை ஓட்டோ தயார் செய்திருந்தார். என்ன செய்தால் கண்ணுக்குத்தெரியும் பிம்பத்தை அதில் கொண்டுவரலாம் என்று யோசித்தோம். ஓட்டோ ஒரு கண்ணாடித் தகட்டில் கறுப்பு மையில் (அன்றைய தேதி)'10-22-38 ASTORIA' என்று எழுதினார்.
நாங்கள் சன்னல் திரைகளை இறக்கி அறையை இருட்டாக்கினோம். அவர் தன் கைக்குட்டையால் அந்தக் கந்தகப் பரப்பை வேகமாகத் தேய்த்து மின்னூட்டம் ஏற்படுத்தினார். பிறகு எழுதப்பட்ட கண்ணாடித் தகட்டை அதன் மேல் வைத்து ஒரு பிரகாசமான பல்பு ஒளியில் சில நொடிகள் காட்டினார். பிறகு கண்ணாடியை எடுத்து விட்டு லைகோபோடியம் பொடியைத் தூவினோம். பிறகு அந்தப் பொடி தூவிய இடத்தில் மெதுவாக காற்றை ஊதின பின் ஒட்டாமல் கிடந்த பொடியெல்லாம் ஓடிவிட, அங்கே மிச்சமிருந்தது அச்சு அசலாக கண்ணாடியில் எழுதப்பட்டதின் நகல்!
நடந்ததை உறுதிப்படுத்திக்கொள்ள நாங்கள் மீண்டும் மீண்டும் அந்த சோதனையைச் செய்தோம். திருப்தியானபின், அந்த நகல் பிம்பத்தை ஒரு மெழுகுத்தாளில் அழுத்தி ஒட்டிக்கொண்டு, ஒட்டப்பட்ட தாளை சூடாக்கி மெழுகை உருகச் செய்வதன் மூலம் அந்தப் பொடியாலான நகலைத் தாளில் நிரந்தரமாக ஒட்டச் செய்தோம். பிறகு சாப்பிடப் போனோம், வெற்றியைக் கொண்டாடினோம்!
தன்னைப் போலவே வேறு யாராவது இதே வழியில் சிந்தித்துக் கண்டுபிடித்துவிட்டால் இத்தனை நாள் பட்ட சிரமம் விழலுக்கு இறைத்த நீராகி விடுமே என்று எண்ணிய கார்ல்ஸன் கவனமாக தன் கண்டுபிடிப்புகளின் காப்புரிமைக்கு சமர்ப்பித்தார். அது வீண் பயமாகிப் போனது! நகலாக்க நுட்பத்தை யாரும் நகலாக்காதது மட்டுமல்ல, இவராக அணுகியுமே இந்தக் கண்டுபிடிப்பை நடைமுறையில் செயற்படுத்த ஒரு நிறுவனமும் துணியவில்லை. இது உலகிற்கு மிகவும் தேவையான நுட்பம் என்ற நம்பிக்கையில் கார்ல்ஸன் உறுதியாக இருந்தார். இப்படியொரு கருவியைக் கொடுத்தால் தன் வீட்டிற்கு வெளியே வரிசையில் நின்று வாங்கிக்கொள்வார்கள் என்று கண்ட கனவு நனவாகிப் போனது. இந்த உலகம் தனக்கு அது தேவை என்ற உணர்வில்லாமல் இருந்தது!
அடுத்த 5 வருடங்களில் பல பெரிய நிறுவனங்களுக்கு நடையாய் நடந்தார். கேட்பாரில்லை. 20 பெரிய நிறுவனங்களுக்குமேல் அவர் கண்டுபிடிப்பை உதாசீனப்படுத்தின. ‘இதெல்லாம் உருப்படாதய்யா’ என்று தள்ளாத குறை. ‘எவனாவது வெள்ளைத் தாளில் ஒரு ஆவணத்தை நகலாக்க ஆசைப்படுவானா?’ என்றும் ஒரு நிராகரிப்பு! (இம்மாதிரி எதிர்காலத்தை மதிப்பிட முடியாதவர்களின் மேற்கோள்களில் சுவையான சிலவற்றை இங்கே காணலாம். அங்கேயும் முத்தாய்ப்பாய்க் காட்டப்படுவது கார்ல்ஸன் பட்ட அடிதான்!)
கார்ல்ஸன் சொல்கிறார்:
சிலருக்கு இது ஒரு தாக்கத்தையுமே ஏற்படுத்தவில்லை; சிலர் லேசான ஆர்வம் காட்டினர். சிலர் எதிராகக்கூடப் பேசினார்கள். என்னிடமிருந்த கண்ணாடித் தகட்டிலும், கலங்கிய நகல்களிலும் ஒரு மிகப்பெரிய எதிர்காலத்தின் சாத்தியம் அடங்கியிருக்கிறதென்று அவர்களுக்கு எப்படிப் புரியவைப்பேன்?
ஆண்டுகள் வெட்டியாக ஓடிக்கொண்டிருந்தன. பலசமயம் இது வேலைக்காகாது என்று சொல்லி விட்டுவிடலாமா என்று சிந்திப்பேன், ஆனாலும் ஒவ்வொரு முறையும் மீண்டும் முயற்சிக்குத் திரும்புவேன். இது இப்படிக் கிடப்பில் போடப்பட வேண்டிய ஒன்றல்ல என்று என் மனதில் அழுத்தமான நம்பிக்கை இருந்தது.
1944-ல் பேட்டல் மெமோரியல் இன்ஸ்டிட்யூட் என்ற ஆய்வு நிறுவனம் அவருடன் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டது. பிறகு 1947-ல் கார்ல்ஸனின் கண்டுபிடிப்பைக் கருவியாக உருமாற்ற ஹாலாய்ட் என்ற நிறுவனம் முன்வந்தது. அந்த நிறுவனம் பிறகு ஸிராக்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் மிகப்பெரிய அளவில் வளர்ந்ததும், நகலாக்கம் மட்டுமன்றி, இன்று கணினி, தகவல் நுட்பம், அலுவலக மேம்பாட்டுத் துறைகளில் பெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதும் வரலாறு.
அந்த நிறுவனத்தின் சாதனை அன்று தொடங்கியது. அந்த வளர்ச்சியை முன்னெடுத்துச் சென்றவர் ஜோசஃப் வில்சன். அவரைப் பற்றியும், ஸிராக்ஸின் மற்ற நுட்பவியல் சாதனைகளைப் பற்றியும் மீண்டும் ஒரு கட்டுரையில் பின்னொருநாள் காணலாம்.
ஜோசஃப் வில்சனின் குரலில் செஸ்டர் கார்ல்ஸனின் பங்களிப்பைப் பற்றி:
அவரின் வாழ்க்கையிலிருந்து நாம் நிறையக் கற்றுக்கொண்டோம். நாம் செய்யும் செயல்கள் அனைத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் கொள்கைகளை நாம் கார்ல்ஸனின் வாழ்க்கையிலிருந்தே பெற்றுக்கொண்டோம். அவை:
- முதன்மையாக, பெரும் சாதனைகளை உருவாக்கும் செயல்களின் ஊற்றுக்கண் ஒரு தனி மனிதனிடமே இருக்கிறது என்பதை என்றும் மறக்க மாட்டோம்.
- இரண்டாவதாக, மற்றவர்களால் தெளிவாக அடையாளம் காண முடியாத தேவைகளைக் கண்டுணர்ந்துகொண்டு, தன் புத்துருவாக்க சிந்தனைகளால் அந்தத் தேவைகளுக்கு விடையாக, பொருட்களையும் சேவைகளையும் உருவாக்குபவரையே பெரும் பரிசுகளும், இலாபங்களும் தேடி வருகின்றன.
(ஆதாரம்: http://www.xerox.com/innovation/Storyofxerography.pdf)
மேலும் வாசிக்க(அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன):
