தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் வடசித்தூரில் முதல் 12 வருடங்கள். பின் பொள்ளாச்சியில் பள்ளியிறுதியும் நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் பொறியியல் பட்டயமும் (DME) பெற்றேன். பள்ளியிறுதி வரை முற்றும் தமிழ் வழிக்கல்வியே. பட்டய வகுப்பில் முதலாண்டில் இயற்பியல் மற்றும் வரைபடக்கலையை தமிழில் கற்றது இனிய அனுபவம். கோவையில் எவெரெஸ்ட் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பகுதி நேரத்தில் இளங்கலைப் பட்டம் (BE) பெற்றேன். வாழ்வில் அறிந்து கொண்டதில் பெரும்பகுதி இக்காலத்தில் பெற்றதே.

சென்னைக்கு அருகில் திருவள்ளூரில் இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தில் அடுத்த ஆறு ஆண்டுகள் வடிவமைப்புப் பொறியாளர் பணியில் மேலும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு. பணியில் இருந்து கொண்டே சென்னை ஐஐடியில் முதுகலைப் பட்டமும் (M. Tech.) பெற்றேன்.

கோவைக்கு மீண்டும் பெயர்ந்து அங்கு ரூட்ஸ் நிறுவனத்தில் வடிவமைப்புத் துறையின் தலைமைப் பொறுப்பேற்றேன். தரையைச் சுத்தப்படுத்தும் கருவிகள் சிலவற்றை கணினி உதவியுடன் வடிவமைப்பு செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. இவற்றில் உலக அளவில் இன்று விற்பனைக்கு வந்துள்ள சில கருவிகள் மனதுக்கு நிறைவைத் தருகின்றன. அனைவரின் ஒத்துழைப்பால் தொழில்நுட்ப இயக்குநர் ஆக்கப் பட்டேன்.

இருந்தும், இன்னும் பரந்த உலகைக் காணவேண்டியும், பொருளாதார உயர்வுக்காகவும் அங்கிருந்து விடைபெற்று, ஒரு உலகளாவிய இந்திய நிறுவனத்தின் சார்பாக இன்று அமெரிக்காவில் பெரிய நிறுவனம் ஒன்றின் ஆராய்ச்சிக் கூடத்தில் பணிபுரிகிறேன். கணினிமூலம் இயந்திரக் கட்டுமானங்களின் ஸ்திரத்தன்மையைப் பகுப்பாய்வு செய்வது முக்கியமான பணி.

மனைவி, மகன், மகளுடன் தற்போது நியூயார்க் மாநிலத்தில் ரோச்சஸ்டர் நகரில் வாழ்க்கை.

என் வலைப்பதிவுகளுக்கு மீள