சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்

» back

குழவி, கிழவி, கொளவி, கல்வி?

ஏழு வருசத்துக்கு முந்தி எனக்கு மக பொறந்தா. கொளந்தைக்கு தண்ணியூத்தியுட (குளிப்பாட்ட) ஒரு வயசான அம்மா அண்ணாடும் (தினமும்) வரும். என்கிட்ட ஒண்ணும் பேச்சு வர்த்தை வெச்சுக்காது. எல்லாம் என் சம்சாரத்தோட சரி. (பையன் பொறந்தப்போ அம்மாவைக் கேக்காம யாருக்கும் இந்த வேலை கிடைக்காது. ஆனா பொண்ணு பொறக்கும்பொது ஆட்சி மாறீட்டுதுங்க:)) ஒரு அண்டா சுடுதண்ணி வெச்சு, இந்தம்மா காலை நீட்டி உக்காந்து, அரப்பு, எண்ணெய், மஞ்சள் எல்லாம் போட்டு, நீவி நீவிக் தண்ணியுத்தி விட்டா கொளந்தை மணிக்கணக்கா தூங்கும். அப்படி ஒரு சொகமாமே!

இப்படியே ஒரு வருஷம் இது நடந்திருக்கும். மாசாமாசாம் அந்தம்மாவுக்கு காசு கொடுத்துடுவோம். அதுதவிர காபி கொடுப்பாங்க, குடிச்சுக்கும். வேற எதுவும் கொடுக்கல் வாங்கல் இருந்தமாதிரித் தெரியலை. இப்பவும் கிழவி எதிரில் பார்த்தால் என் சம்சாரத்துக்கிட்ட பேசீட்டுப்போகும்.

முந்தா நேத்து இப்படித்தான் அந்தம்மா கையில் அருவாளோட எங்க வீதியில வடபுறமா ஒசரமா வளந்திருக்கிற முள்ளுவேலியை வெறகுக்கு வெட்டப் போயிருக்குது. தென்னந்தோப்போரமா  இருந்த வேலி நல்லா நெடு நெடுன்னு அடத்தியா இருந்ததானால, அங்க வெட்டுனா நல்ல கனமான விறகு கிடைக்கும்னு வெட்டப்போக...

'அய்யோ, அய்யோ'ன்னு சத்தம் வர பக்கத்தல இருந்தவங்க ஓடிப்போய்ப் பாத்திருக்காங்க. அந்தம்மா 'அய்யோ, கொளவி கொட்டீருச்சு'ன்னு அழுதுட்டே துடிச்சிருக்குது. அங்கே ஒரு பெரிய கொளவிக்கூடமே 'ஙோய் ஙொய்'னு சுத்தீருக்குது. எப்படியோ இந்தம்மாவை அங்கேருந்து இக்கட்ட கூட்டியாறதுக்குள்ள நிறைய இடத்துல கடிச்சுருச்சு, பாவம்.

அந்தம்மா துடிக்கறதப் பாத்து எங்க பக்கத்தூட்டுக்காரர் ஒரு ஆட்டாவைப்புடிச்சு, ஆஸ்பத்திரிக்குக் கூட்டீட்டுப் போக ஏற்பாடு பண்ணீருக்கறாரு. அப்ப விசயம் தெரிஞ்சு அந்தம்மாவோட மருமகளும் ஓடிவந்துட்டுது. அந்த வலீலையும், மருமகளைப்பாத்து, 'நீ ஆட்டோவில ஏறாத, எங்க்கூட வராதேன்னு' கத்தீருக்குது கிழவி.

அந்தமா ஆஸ்பத்திரீயிலுமே இதே மாதிரி 'மருமகளை ரூம்புக்குள்லயே வரவேண்டாம்னு சண்டை கட்டுச்சாமா, சொன்னாங்க. என்ன கோவமோ! வயசான காலத்தில முள்ளுவெறகு வெட்ட வெச்சிட்டாளேன்னு கோவமோ, என்னமோ. ராத்திரி எனக்கு இந்த விசயம் சொன்னாங்க. காலையில் எந்திரிக்கும்போதே அந்தம்மா செத்துப்போச்சுன்னு சேதி வந்தாச்சு. அட, கொளவி கொட்டி உசுரு போகுமான்னு ஆச்சரியமா இருக்குது. ஒடம்பு ஏகத்துக்கும் கொட்டீருச்சாமா. அது என்னமோ வெசக்கொளவியாமா. முள்ளு முள்ளா ஒடம்பெல்லாம் தெச்சிருச்சாமா. நம்பவே முடியலை... அத்தனை வலீலும் அந்தம்மா மருமகளை அண்ட வுடலையே! தெச்சிருந்த முள்ளைவிடவா மருமகமேல கோவம் வலிச்சிருக்கும்? ஒண்ணுமே புரியலையே, என்ன படிச்சு என்ன போங்க!


Published at 05:25:21, Monday, 24.10.05

Comments?