சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்
குழவி, கிழவி, கொளவி, கல்வி?
ஏழு வருசத்துக்கு முந்தி எனக்கு மக பொறந்தா. கொளந்தைக்கு தண்ணியூத்தியுட (குளிப்பாட்ட) ஒரு வயசான அம்மா அண்ணாடும் (தினமும்) வரும். என்கிட்ட ஒண்ணும் பேச்சு வர்த்தை வெச்சுக்காது. எல்லாம் என் சம்சாரத்தோட சரி. (பையன் பொறந்தப்போ அம்மாவைக் கேக்காம யாருக்கும் இந்த வேலை கிடைக்காது. ஆனா பொண்ணு பொறக்கும்பொது ஆட்சி மாறீட்டுதுங்க
) ஒரு அண்டா சுடுதண்ணி வெச்சு, இந்தம்மா காலை நீட்டி உக்காந்து, அரப்பு, எண்ணெய், மஞ்சள் எல்லாம் போட்டு, நீவி நீவிக் தண்ணியுத்தி விட்டா கொளந்தை மணிக்கணக்கா தூங்கும். அப்படி ஒரு சொகமாமே!
இப்படியே ஒரு வருஷம் இது நடந்திருக்கும். மாசாமாசாம் அந்தம்மாவுக்கு காசு கொடுத்துடுவோம். அதுதவிர காபி கொடுப்பாங்க, குடிச்சுக்கும். வேற எதுவும் கொடுக்கல் வாங்கல் இருந்தமாதிரித் தெரியலை. இப்பவும் கிழவி எதிரில் பார்த்தால் என் சம்சாரத்துக்கிட்ட பேசீட்டுப்போகும்.
முந்தா நேத்து இப்படித்தான் அந்தம்மா கையில் அருவாளோட எங்க வீதியில வடபுறமா ஒசரமா வளந்திருக்கிற முள்ளுவேலியை வெறகுக்கு வெட்டப் போயிருக்குது. தென்னந்தோப்போரமா இருந்த வேலி நல்லா நெடு நெடுன்னு அடத்தியா இருந்ததானால, அங்க வெட்டுனா நல்ல கனமான விறகு கிடைக்கும்னு வெட்டப்போக...
'அய்யோ, அய்யோ'ன்னு சத்தம் வர பக்கத்தல இருந்தவங்க ஓடிப்போய்ப் பாத்திருக்காங்க. அந்தம்மா 'அய்யோ, கொளவி கொட்டீருச்சு'ன்னு அழுதுட்டே துடிச்சிருக்குது. அங்கே ஒரு பெரிய கொளவிக்கூடமே 'ஙோய் ஙொய்'னு சுத்தீருக்குது. எப்படியோ இந்தம்மாவை அங்கேருந்து இக்கட்ட கூட்டியாறதுக்குள்ள நிறைய இடத்துல கடிச்சுருச்சு, பாவம்.
அந்தம்மா துடிக்கறதப் பாத்து எங்க பக்கத்தூட்டுக்காரர் ஒரு ஆட்டாவைப்புடிச்சு, ஆஸ்பத்திரிக்குக் கூட்டீட்டுப் போக ஏற்பாடு பண்ணீருக்கறாரு. அப்ப விசயம் தெரிஞ்சு அந்தம்மாவோட மருமகளும் ஓடிவந்துட்டுது. அந்த வலீலையும், மருமகளைப்பாத்து, 'நீ ஆட்டோவில ஏறாத, எங்க்கூட வராதேன்னு' கத்தீருக்குது கிழவி.
அந்தமா ஆஸ்பத்திரீயிலுமே இதே மாதிரி 'மருமகளை ரூம்புக்குள்லயே வரவேண்டாம்னு சண்டை கட்டுச்சாமா, சொன்னாங்க. என்ன கோவமோ! வயசான காலத்தில முள்ளுவெறகு வெட்ட வெச்சிட்டாளேன்னு கோவமோ, என்னமோ. ராத்திரி எனக்கு இந்த விசயம் சொன்னாங்க. காலையில் எந்திரிக்கும்போதே அந்தம்மா செத்துப்போச்சுன்னு சேதி வந்தாச்சு. அட, கொளவி கொட்டி உசுரு போகுமான்னு ஆச்சரியமா இருக்குது. ஒடம்பு ஏகத்துக்கும் கொட்டீருச்சாமா. அது என்னமோ வெசக்கொளவியாமா. முள்ளு முள்ளா ஒடம்பெல்லாம் தெச்சிருச்சாமா. நம்பவே முடியலை... அத்தனை வலீலும் அந்தம்மா மருமகளை அண்ட வுடலையே! தெச்சிருந்த முள்ளைவிடவா மருமகமேல கோவம் வலிச்சிருக்கும்? ஒண்ணுமே புரியலையே, என்ன படிச்சு என்ன போங்க!
RSS 2.0 ஓடை, பின்தொடர்பு, அச்சிடல், மின்மடலிடல்
Local search குழவி கிழவி கொளவி கல்வி
No results found or search not configured.
Google search
No results found or search not configured.
மறுமொழிகள்:
Dondu சொன்னது:கேட்கவே கஷ்டமாயிருக்கிறது காசி அவர்களே. மாமியாருக்கும் மருமகளுக்கும் என்ன சண்டையோ தெரியவில்லை. ஆயினும் இப்போது இருக்கும் மருமகளுக்கு இது பெரிய தண்டனைதான். கிழவியும் தான் இறக்கப் போகிறோம் என்பது தெரியாமலேயே சண்டை போட்டிருப்பார் என நினைக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஏதோ ஜாலியான பதிவுன்னு படிக்க ஆரம்பிச்சேன்..கடைசியிலே என்னடான்னா பாட்டி செத்துட்டாங்க ![]()
இதுபோல திருச்சி அரவானுரில் ஒரு வயதானவரைக்கதண்டு என்றவகை வண்டு கடித்தால் அல்ல கொட்டியதால் இறந்துவிட்டார். ஒன்று கடித்தாலே விஷம் பல கடித்தால் அப்படித்தான் இறப்பர் ஆனால் மனிதர் இருக்கமிடத்தில் அவை இருக்காதென கேள்விப்பட்டேன.
திங்கள், 24.10.05, 09:08:38 karthikramas சொன்னது:/ஆட்சி மாறீட்டுதுங்க/ ஆட்சி மாறினது சரி, எலக்ஷன் சிஸ்டமே மாறி இருக்குமே ![]()
குளவி கடிச்சு ஒருத்தர் இறந்ததாக இப்போதுதான் நானும் கேள்விப்படுகிறேன். என் அனுதாபங்கள்.
//என்ன படிச்சு என்ன போங்க!//சரிதான்.
கதைன்னா சூப்பர் தான்.... ஆங்.....ங்.... என்ன சொல்லுரதுன்னா?????????
அட போங்கப்பா !.
// என்ன படிச்சு என்ன போங்க! //
ஜோசப் இருதயராஜ்
திங்கள், 24.10.05, 09:55:57 Dondu சொன்னது:சொல்ல மறந்து போனது. தென்னை மரத்தில் இதுபோன்ற வண்டுகள் இருக்கும். அதன் பெயர் கதண்டு என்பார்கள். அதனைப் பார்த்த மாத்திரத்தில் தீயணைப்புத் துறைக்கு தகவல் தந்தால் தகுந்த முன்னேற்பாடுகளுடன் வந்து பிடித்துச் செல்வார்கள்.
கேட்க மறந்து விட்டேன், அந்தப் பாட்டி தாழ்ந்த இனம்தானே? ஏனென்றால் அந்த வண்டு பார்ப்பனர்களை ஒன்றும் செய்யாது என்று கேள்விப் பட்டு இருக்கிறேன்.
திங்கள், 24.10.05, 20:32:21 துளசி கோபால் சொன்னது:பாவம் அந்தப் பாட்டி. மாமியார் மருமகள்மட்டுமில்லே பல சொந்தங்களிலே நான் செத்தாலும் என் மூஞ்சுலே வந்து முழிக்கக்கூடாதுன்னு ஒரு ஆவேசத்துலே சொல்லிட்டு அதேபோல இருக்கறவங்களும் இன்னும் இருக்காங்கதான் காசி.
ரோசம். ரொம்பவே ரோசக்காருங்க.
இது அங்கதமா ? ஏதோ சொல்ல வருகிறீர்கள். என்ன என்று தான் புரியவில்லை
இந்தக் கதைக்கும் தமிழ்மணம் பற்றிய பதிவுகளுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பது போல் தெரிகிறது ஆனால் என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்பது புரியவில்லை ![]()
அய்யய்யோ குமார்,
எங்க வீட்டுக்கிட்ட நடந்த ஒரு சமாச்சாரம் இது. சரியா எளுதவரலைன்னு நினைக்கிறேன். ஆழமெல்லாம் தேடாதீங்க. அங்கதமாவது ஒண்னாவது. நமக்கு அதெல்லாம் தெரியாதுங்க. நான் ரொம்ப சீரியஸ் பேர்வழி.
செவ்வாய், 25.10.05, 12:35:21 செல்வராஜ் சொன்னது:காசி, வட்டார மொழி நல்லா வந்திருக்கு. ஆனா இறுதிப் பகுதி கொஞ்சம் சரியா வரலை தான். (யோசிச்சுட்டுச் சொல்லாம விட்டுட்டேன்). அந்தக் கடைசி வரியில்லாமலேயே நல்லா இருந்திருக்கும். அப்புறம் அந்த இறப்பின் தீவிரம் கொஞ்சம் சரியா வரலைன்னு எனக்குத் தோணுது.
செவ்வாய், 25.10.05, 20:08:27 raviaa சொன்னது:kaasi very good ..the regional language..oh..
some problem with my computer ..sorry for english
வியாழன், 27.10.05, 17:39:42 aadhi சொன்னது:உங்களின் புலம் பெயர்ந்த அனுபவங்களை நேரம் கிடைக்கும் போது எழுதுங்களேன் காசி.முக்கியமாக உங்கள் குழந்தைகளை எப்படி தயார் படுத்தினீர்கள்.அவர்கள் மாற்றங்களை எப்படி எடுத்துக் கொண்டார்கள் என்பது பற்றி முடிந்தால் எழுதுங்களேன்.
..aadhi
மறுமொழியிடும்போது கவனிக்க:
விரும்பினால் மறுமொழியினூடே கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தலாம்:
- [a href=http://url.com]சுட்டியின் பெயர்[/a] என்பது சுட்டியாகக் காட்டப்படும்.
- [abbr title=text]abbr[/abbr] என்பது <abbr> ஆக மாற்றப்படும்.
- [cite], [code], [em], [strong], [q], [li] — என்பனவும் இதேபோல...
மறுமொழியிட:
Comments must be approved before being published. Thank you!
This item is closed, it's not possible to add new comments to it or to vote on it
05:25:21 - திங்கள், 24.10.05 -


