சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்
கோவை வலைப்பதிவர்/இணைய நண்பர் சந்திப்பு
அழைப்பை ஏற்று வந்து கலந்துகொண்ட வலைப்பதிவர்கள் (பாலாக்கள், பிரகாஷ், ராஜா) நான்கு பேருக்கும், வலைப்பதிவரல்லாத சிவகுமார் (தமிழ்பயணி.காம் இணையதளம் நடத்துபவர்) மற்றும் என் நெடுநாள் நண்பர் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரனுக்கும் நன்றி. முக்கியமாக நாமக்கல்லிலிருந்து இதற்கென (4 மணிநேரம் ஒருவழி) பயணித்துவந்த ராஜாவின் ஆர்வம் பாராட்டத்தக்கது.
அனைவரும் இன்றையதேதியில் தீவிர வலைப்பதிவரல்லாததாலோ, முதன்முறையாக சந்திப்பதாலோ 7 மணிக்கு தொடங்கிய சந்திப்பில் 9 மணிவரை தமிழ் இணையம்/வலைப்பதிவு தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை. பொதுவான விதயங்களும் அறிமுகமுமாகவே பொழுது கழிந்தது. சிவகுமார் விடுப்புப் பெற்று சென்றும் விட்டார். பிறகே தமிழ் இணையம் பற்றிப் பேச்சு திரும்பியது. அதில் முக்கியமாக ஒரு விதயம் நெடுநேரம் விவாதிக்கப்பட்டது. அதாவது தமிழ் குறியேற்றம், யுனிகோடு, தரநிர்ணயம் சம்பந்தமாக தமிழக அரசின் முனைப்பை தூண்டும் விதமாக நேரமும், ஆர்வமும், அறிவும் உள்ள தமிழிணையப் பயனாளர்கள் தன்னார்வப் பணியாக எடுக்கவேண்டிய சில கூட்டுமுயற்சிகள் பற்றி விவாதிக்கப்பட்டது. முயற்சிகளை பொதுவில் 'சொல்வதைவிட' 'செய்வதில்' உள்ள முக்கியத்துவமும் கவனத்தில் கொள்ளப்பட்டது. முயற்சிகள் நடப்புக்கு வரும்பொது மேலும் விளக்கமான தகவல்கள் வெளியாகலாம்.
இரவு 12 மணியளவில் பாலமுருகன் விடைபெற்றும், மீண்டும் மீண்டும் காப்பியை உறிஞ்சியபடி மீதி ஐவரும் 1:30 வரை பேசினோம். பேசியவரை நிறைவாகவும், இன்னும் பலதையும் பேச நேரம் போதவில்லையே என்ற ஏக்கத்துடனும் சந்திப்பு நிறைவுபெற்றது. ராஜாவும் பிரகாஷும் இன்னும் விளக்கமாகப் பதிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
படங்கள்:
சுபாஷ் சந்திரன், 'சோடாபாட்டில்' பாலா, 'கலெக்டர்' பாலா
நாமக்கல் ராஜா, 'தமிழ்பயணி' சிவகுமார்
Published at 13:36:37, Sunday, 02.10.05