சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்

பாலாஜி சக்திவேலின் அடுத்த படம் எப்போது வரும்?

எச்சரிக்கை:
1. வலைப்பதிவுகளில் சினிமாவைப் பற்றி எழுதுவது இப்போதைய சூடான சமாச்சாரமாகிப் போனதால் நான் இதை எழுதவில்லை.
2. இந்தப் படம் பலருக்குப் பழையதாக  ஆகியிருக்கலாம். எனக்கு இது புத்தம் புதிய படம். நேற்றுத்தான் பார்த்தேன். அதனால் இன்று எழுதுகிறேன்
3. இது சினிமா விமர்சனமல்ல. படம் பார்த்ததால் எனக்குத் தோன்றிய எண்ணங்களின் தெளிவில்லாத கலவை. அவ்வளவே.

நேற்றுப் பார்த்த 'காதல்' படம் ஏற்கனவே வலைப்பதிவுகளிலும் யாஹூ-குழுக்களிலும் அல்சப்பட்டபோது மேலோட்டமாகவே வாசித்திருந்தேன். வீட்டில் ஒரு படம் ஓடிக்கொண்டிருக்க (மனைவி உபயம்) எதேச்சையாக அது என்ன படம் என்று கேட்டபின் பேரைச் சொன்னதும் எனக்குள் ஆர்வம் வந்தது அந்த மேலோட்ட வாசிப்பின் பயனே; அதனால் அவற்றை எழுதியவர்களுக்கு நன்றி. அவர்கள் பார்வையைக் குறிப்பிட்டு ஆதரித்தோ மறுத்தோ பேசப்போவதில்லை. எனவே அவற்றின் தொடுப்புகளைக்கூடத் தேடி எடுக்கவில்லை.

kaadhal

 (வலது புறம் இருக்கும் படம் சுடப்பட்டது http://www.deepamtv.tv/ இலிருந்து. நன்றி)

வெகு நாட்களுக்குப்பின், ஒரு படத்தில் வரும் முக்கியமான, முக்கியமில்லாத பாத்திரங்களில் பெரும்பாலானோர் நான் என் கண் முன்னால் பார்த்த பேசிப் பழகிய மனிதர்களாக இருப்பதும், வர்த்தக சினிமாவாக இருந்தும் உண்மைக்கு வெகு அருகில் அவர்கள் நடப்பும் நடிப்பும் இருப்பதும் என்னை இந்தப் படத்தில் எளிதில் லயிக்கச் செய்து, இடைவெளிவிடாமல் முழுப்படத்தையும் பார்க்கச் செய்தது.

இந்த மெக்கானிக் கதாநாயகனை ஒரு டெய்லராக அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். வெளியூரிலிருந்து வந்து வேலைப்பார்த்த சுறுசுறுப்பான அந்த டெய்லர், கடையைக் கடந்து பள்ளிக்குப் போய்வந்த உள்ளூர் பணக்காரர் ஒருவர் மகளுடன் காதலில் ஈடுபட்டது, அதையொட்டி அந்த பணக்காரர் வீட்டில் எழுந்த எதிர்ப்புகள் என்று இன்றும் நினைவிருக்கிறது.

அந்தக் கரட்டாண்டி... மெக்கானிக் கடையை ஒரு சைக்கிள் கடையாக மாற்றினால் போதும். நான் பெரும்பொழுதுகளை தினத்தந்தி படித்துக்கொண்டும் வாடகைக்கு வெளியே போகும் சைக்கிள்களின் நேரத்தை நோட்டுப்புத்தகத்தில் குறித்து வைத்துக்கொண்டும், பல சமயங்களில் அங்கே நடக்கும் அரட்டைகளை சுவாரசியமாய் வேடிக்கை பார்த்துக்கொண்டும் கழித்த அந்த நாட்களில் இதே குட்டை உடலும் கீச்சுக்குரலும், அரைக்கால் சட்டையும கொண்ட கரட்டாண்டியுடன் 'வாழ்ந்தே' இருக்கிறேன். அந்த 'நாராயண'னுக்கு அப்போதே 20-30 வயது இருக்கும் என் 16 வயது ஒல்லி உருவத்தைக் காட்டிலும் சிறு உருவம்...

பிறகு அந்த கதாநாயகியின் அப்பா..வைன்ஷாப்புக்குப் பதில் பெட்ரோல் பங்க். அவர் தள்ளுவண்டிக்காரரிடம் 'ஒரு நாளைக்கு எவ்வளவுக்கு வியாபாரம் ஆகும்?' என்று கேட்பது.. என் மாமாவே அங்கே தெரிந்தார். அந்த இடத்தில் அதையேதான் கேட்பார்.

ஒத்தைக்கை சித்தப்பா... யாரலும் எளிதில் அடக்கவே முடியாத தன் வெட்டுப்பட்ட கையை வைத்துக்கொண்டு கோவை கோபாலபுரத்தில் அனாயசமாக சினிமா பிலிம் தகரப்பெட்டி தூக்கி வாழ்ந்த 'மேல்வீட்டு' மணி...

திரட்டிச்சீர் விழாவில் கறி பிரியாணி, அதையொட்டி நடக்கும் சொந்தங்களின் ஆரவாரம், அடிதடி..அட, அந்த வீடியோப் பதிவு!

அந்த பாட்டி, அம்மாமார், கதாநாயகனின் அம்மா...எல்லாருமே நேரில் சந்தித்திருப்பவர்களே. என்ன, ஒரே கதையில் இணையவில்லை. அதுதான் நிஜத்துக்கும் நிழலுக்கும் உள்ள வித்தியாசம்.

ஒன்று மட்டும் எனக்கு முழுதாக ஒட்டவில்லை. மேன்ஷன் மக்கள்! ஹாஸ்டலிலோ, மேன்ஷனிலோ சொல்லிக்கொள்ளும்படி வாழாததால் எனக்கு அந்தக் காட்சிகள் மேற்சொன்ன பாதிப்பை ஏற்படுத்தவில்லை. சட்டென்று அனைவரும் பெண்ணுக்கு அண்ணன்மார் ஆகி ஆடிப்பாடுவது சினிமாத்தனமாகக்கூடத் தெரிந்தது.

என் 12 வயது மகனும் 7 வயது மகளும்கூட விரும்பி ரசித்து இரண்டாம் முறையாக இந்தப் படத்தைப் பார்த்தார்கள். இத்த்னைக்கும் தமிழ்ப்படம் போடுகிறோம் என்றாலே தன் கார்ட்டூன் டிவிடி ஒன்றைப் போடச்சொல்லி அழுது அதைத் தடுப்பதிலேயே குறியாக இருக்கும் என் மகள் இதை இரண்டாம் முறையாகப் பார்க்கிறாள்!

என் நேரடி அனுபவத்தில் நடந்ததில் இருந்து வேறுபட்டிருந்ததில் முக்கியமானது, அந்த டைய்லர் காணாமல் போன ஒரிரு நாளில் ஊர்ப் பொதுக் கிணற்றில் பிணமாகக் கிடந்ததுதான். அடித்து அவமானப்படுத்தியதால் இறந்தாரா, அல்லது கொன்று கிணற்றில் வீசப்பட்டாரா என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. அப்போது நான் 14 வயதுப் பையன் தானே.

 நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைவைத்தும் அனைவரும் ரசிக்கும்படியான ஒரு நல்ல படத்தைக் கொடுக்கமுடியும் என்று உணர்த்திய பாலாஜி சக்திவேல் பாராட்டப்படவேண்டியவர். வாழ்க!

காசி - clock 11:06:28 - திங்கள், 25.04.05 - வாழ்க்கை - 4088x - pencil நிரந்தர சுட்டி

RSS 2.0 ஓடை, பின்தொடர்பு, அச்சிடல், மின்மடலிடல்

  • மறுமொழிகளுடன் இந்த ஆக்கத்தின் ஓடை: RSS 2.0 comments feed
  • DISALLOWED (TrackBack)
  • இந்தப் பக்கத்தை நீங்கள் அச்சிட, மின்மடலிட இயலும்.

Local search பாலாஜி சக்திவேலின் அடுத்த படம் எப்போது வரும்

No results found or search not configured.

Google search

No results found or search not configured.

மறுமொழிகள்:

karupy சொன்னது:

காசியாரே விழுந்தாலும் மீசையில உங்களுக்கு மண்படாது.

//வலைப்பதிவுகளில் சினிமாவைப் பற்றி எழுதுவது இப்போதைய சூடான சமாசாரமாகிப் போனதால் நான் இதை எழுதவில்லை\\
காரணம் உண்மையில் இதுதானே.

காதல் உண்மைக் கதையென்று இயக்குனர் எங்கோ சொன்னதைப் படித்திருக்கின்றேன். இப்படியான சம்பவங்களை ஜீனியர் விகடனிலும் படித்திருக்கின்றேன். நானும் தங்களைப் போல் கேட்கின்றேன் பாலாஜியிடம். அடுத்த படம் எப்போது?

திங்கள், 25.04.05, 11:16:19 wordsworthpoet சொன்னது:

* இப்போதெல்லாம் காசியின் பதிவுகளுக்கு பெரும்பாலும் பின்னூட்டங்கள் <b>ஆமாம்...ஆமாம்...ஆமாம்</b> என வருவதால்: நான் அப்படி பின்னூட்டம் இடவில்லை ;-)

* காசியின் எண்ணங்களின் தெளிவில்லாத கலவை பற்றி சொல்லவேண்டிமானால்,
காசி, இந்த காதல் கதையை, தான் எடுக்க நினைத்து நண்பர்களிடம் சொல்லியதை யாரோ பாலாஜிசக்திவேலுக்கு சுட்டுக் கொடுத்துவிட்டார்கள் என்று சொல்ல வருகிறாரோ என்று நினைக்க முடியவில்லை. (தெளிவில்லாத கன்னாபின்(னா)னூட்டம் !)

திங்கள், 25.04.05, 11:56:01 Kasi சொன்னது:

கறுப்பி://காசியாரே விழுந்தாலும் மீசையில உங்களுக்கு மண்படாது. //

:(

wwp: //இப்போதெல்லாம் காசியின் பதிவுகளுக்கு பெரும்பாலும் பின்னூட்டங்கள் <b>ஆமாம்...ஆமாம்...ஆமாம்</b> என வருவதால்: நான் அப்படி பின்னூட்டம் இடவில்லை //

இல்லை இல்லை...இல்லை.. சொல்லும்படி ஒண்ணு எழுதிட்டாப்போச்சு. :P

திங்கள், 25.04.05, 12:07:15 karthikramas சொன்னது:

//இது சினிமா விமர்சனமல்ல//
நல்ல விமர்சனம்.

//என் 12 வயது மகனும் 7 வயது மகளும்கூட விரும்பி ரசித்து இரண்டாம் முறையாக இந்தப் படத்தைப் பார்த்தார்கள். //
குட்டிகளுக்கு இப்பவே இந்த ரசனையென்றால், நம்ம வயசில் என்ன பார்ப்பார்கள்?

திங்கள், 25.04.05, 12:14:24 ann சொன்னது:

ask what they will do, dont ask what they will watch :)

திங்கள், 25.04.05, 14:42:34 துளசி கோபால் சொன்னது:

அன்புள்ள காசி,

// வலைப்பதிவுகளில் சினிமாவைப் பற்றி எழுதுவது இப்போதைய சூடான
சமாச்சாரமாகிப் போனதால் ...//
ஒண்ணு கவனிச்சீங்களா? வலப்பதிவுகளிலே ஏதாவது சினிமா சமாச்சாரமுன்னா குறைஞ்சது
ஒரு பின்னூட்டம் வந்துரும்.

ஆனா மத்த விஷயங்களுக்கு ?
மூச்.....

என்றும் அன்புடன்,
துளசி.

திங்கள், 25.04.05, 17:09:06 செல்வராஜ் சொன்னது:

காசி, எனக்கும் இது புதுப்படம் தான். போன வாரம் தான் பார்த்தோம். கொஞ்சம் அடிதடியப் பாத்து எங்க வீட்டு ஆறு/நாலு வயதைப் பார்க்க விடலை. மற்றபடி படம் எனக்கும் பிடித்திருந்தது. முடிவு நிறையவே பாதித்தது. அடுத்த நாள் வரை யோசிக்க வைத்தது. யதார்த்தமான பாத்திரப் படைப்புக்கள் என்று எனக்கும் பட்டது.

ஆமாம், எதற்கு இத்தனை எச்சரிக்கைக் குறிப்புக்கள் ?

திங்கள், 25.04.05, 17:33:43 Padma Arvind சொன்னது:

காசி
நான் இன்னும் பார்க்கவில்லை. இன்னும் ஒருவருடம் ஆனாலும் ஆகலாம். அடுத்த படம் எதிர்பார்த்து இருக்கும் போது இயக்குநர்கள் ஏனோ ஏமாற்றிவிடுகிறார்கள், ஒரு சிலரைத் தவிர.

திங்கள், 25.04.05, 19:21:15 வசந்தன் சொன்னது:

<a href=http://vasanthanin.blogspot.com/2005/04/blog-post_26.html...> இதப் பாருங்கோ.</ a>

திங்கள், 25.04.05, 22:07:44 மு. சுந்தரமூர்த்தி சொன்னது:

காசி,
நானும் இரண்டு வாரங்களுக்கு முன் தான் பையனோடு உட்கார்ந்து பார்த்தேன். துணைத் தலைப்புகளோடு, தெளிவான ஐங்கரன் DVDல். போதுவாகவே தமிழ்ப் படம் என்றால் இடத்தைக் காலி செய்துவிடும் பையன் கடைசி வரை பார்த்து ரசித்தான். முடிவில் அவனுக்குப் பிடித்த பாத்திரம் அந்த எடுபிடி பையன். பிடிக்காதது ஒத்தைக்கை சித்தப்பா. அப்பா முதலிலிருந்து கடைசி வரை முரடன். அதனால் பிரச்சினையில்லை. சித்தப்பாவோ எல்லா கட்டங்களிலும் ரொம்ப நல்லவராக இருந்து கடைசியில் அப்படி மாறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவனுக்கு.

நீங்கள் குறிப்பிட்டுள்ள மேன்ஷன் இளைஞர்கள் சித்தரிப்பில் குறை இருப்பதாகத் தெரியவில்லை. அந்த ஆட்டம், பாட்டுக்களை நீக்கிப் பார்த்தால் திருமணமாகாத சராசரி இளைஞர்களின் உளவியல் நன்றாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது இளைஞர்களுக்கு முன்பின் தெரியாத இளம்பெண்ணைப் பார்த்தால் மோகம் வரும். அதே தெரிந்த பெண்ணென்றால்--சொந்த சகோதரி, உறவுக்காரப் பெண், நண்பனின் சகோதரி, நண்பனின் காதலி போன்று--மோகம் கரிசனமாக மாறுவது சாதாரணமாக நடக்கக் கூடியது. இந்தப் படத்துக் கதாநாயகியும், நண்பனின் நண்பன் காதலி என்று தெரிந்தபின், அதுவும் தங்களுடைய உதவி அவர்களுக்குத் தேவை என்று அறிந்தபின் சகோதரியாகப் பாவித்து உதவ முன்வருவது முற்றிலும் இயற்கையானது. சொல்லப்போனால் முதலில் வக்கிரமாக நடந்துக்கொண்டு, பின் உண்மை தெரியும்போது குற்றவுணர்வில் அதிகமாகவே உதவி செய்வதும் நடக்கக்கூடியது தான்.

செவ்வாய், 26.04.05, 00:04:19 selvanayaki சொன்னது:

பாத்து மறந்துபோயிருந்த படத்தை உங்கள் பதிவு மீண்டும் நினைவூட்டியது. அந்தப் பூப்பு நன்னீராட்டு விழாப் பாடல் காட்சி நீங்கள் சொன்னதுமாதிரி இயல்பான பதிவாக இருந்தது. எனக்கும் பிடித்தது. பெரும்பாலும் இம்மாதிரிக் காட்சியில் தங்கள் கற்பனையை விரித்து என்னென்னவோ செய்வார்கள் நம் இயக்குனர்கள். நமக்கும் அதைப் பார்க்கும் ஆர்வம் போய் forward செய்யவேண்டியிருக்கும்.

செவ்வாய், 26.04.05, 00:39:19 Kasi சொன்னது:

karthikramas சொன்னது: //குட்டிகளுக்கு இப்பவே இந்த ரசனையென்றால், நம்ம வயசில் என்ன பார்ப்பார்கள்?//
இதை ரசிக்க எந்த ஒரு முன்னேற்பாடும், பக்குவமும், தயார்படுத்தலும் தேவையில்லை என்பதே அவர்கள் ரசிப்பதிலிருந்து நான் புரிந்துகொள்வது. எனவே எங்கேயும் கொண்டு விடும் என்பதற்கான அறிகுறிகளை எதிர்பார்ப்பது சரியாகாது.

துளசி கோபால் சொன்னது: //ஆனா மத்த விஷயங்களுக்கு ?
மூச்.....//
:-)
(சத்தம் கேக்குதா? மூச் விட்டேன் :P)

செல்வராஜ் சொன்னது: //ஆமாம், எதற்கு இத்தனை எச்சரிக்கைக் குறிப்புக்கள் ?//
இதெல்லாம் ஒரு 'விற்பனை உத்தி'தான்னு வெச்சுக்கங்க செல்வா..:-D

Padma Arvind சொன்னது: //அடுத்த படம் எதிர்பார்த்து இருக்கும் போது இயக்குநர்கள் ஏனோ ஏமாற்றிவிடுகிறார்கள், ஒரு சிலரைத் தவிர.//
ஆமாங்க. அதுக்காக எதிர்பாக்காம இருக்கமுடியலை. நம்பிக்கைதானே வாழ்க்கை.

வசந்தன் சொன்னது:// http://vasanthanin.blogspot.com/2005/04/blog-post_26.html... இதப் பாருங்கோ.//
குறும்பை ரசித்தேன்.

மு. சுந்தரமூர்த்தி சொன்னது: // சித்தப்பாவோ எல்லா கட்டங்களிலும் ரொம்ப நல்லவராக இருந்து கடைசியில் அப்படி மாறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவனுக்கு.//
புரிகிறது. ஆனால் பெரியவர்களுக்கு அவரின் செயல் ஆச்சரியமளிக்காது என்று நினைக்கிறேன்.

//நீங்கள் குறிப்பிட்டுள்ள மேன்ஷன் இளைஞர்கள் சித்தரிப்பில் குறை இருப்பதாகத் தெரியவில்லை. அந்த ஆட்டம், பாட்டுக்களை நீக்கிப் பார்த்தால் திருமணமாகாத சராசரி இளைஞர்களின் உளவியல் நன்றாகவே சொல்லப்பட்டிருக்கிறது. //
எனக்கு விளங்கிக்கொள்ள முடிகிறது. நானாக அந்த சூழலை அருகிலிருந்து உணர்ந்து அனுபவைத்ததில்லை என்பதை மட்டும் முன்வைத்து என்னால் முழுதும் ஒட்டமுடியவில்லை என்று சொன்னேன். அது நம்பமுடியவில்லை என்ற பொருளில் அல்ல. உங்கள் உளவியல் ரீதியான விளக்கம் அருமை.

selvanayaki சொன்னது: //அந்தப் பூப்பு நன்னீராட்டு விழாப் பாடல் காட்சி நீங்கள் சொன்னதுமாதிரி இயல்பான பதிவாக இருந்தது. //
ஆமாங்க. எதையும் ஹைப் செய்யாமல் அளவாக இருந்தது நன்றாக இருந்தது.

ann: Thanks for your comments.

செவ்வாய், 26.04.05, 09:22:08 dharumi சொன்னது:

text --இதெல்லாம் என்னங்க? ஒண்ணும் புரியலை...

ஞாயிறு, 01.05.05, 12:49:36 karthikramas சொன்னது:

¸¡º¢ ÅÕ¸ ÅÕ¸,
§À¡¸ ÓýÉ¡Ê ´Õ Å¡÷ò¨¾ ¦º¡øÄ¢ðÎô§À¡É¡, ¿£í¸ þøÄ¡¾ôÀ ¦¸¡ïºõ «¼í¸¡Á ¬¼Ä¡õ ±ýÈ¡ø þôÀÊ Àñ½¢ðÎ §À¡Â£ðË÷¸§Ç? ;-)

வெள்ளி, 06.05.05, 10:11:36

மறுமொழியிடும்போது கவனிக்க:

விரும்பினால் மறுமொழியினூடே கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தலாம்:

மறுமொழியிட:

Comments must be approved before being published. Thank you!

This item is closed, it's not possible to add new comments to it or to vote on it