சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்

நியூஜெர்சி வலைப்பதிவர் சந்திப்பு.

பேரைப் பார்த்து யாரும் ரொம்ப எதிர்பார்க்க வேண்டாம். சிறு சந்திப்புத்தான். இங்கே அமெரிக்காவில் சிங்கப்பூரைப் போலவோ சென்னையைப் போலவோ ஒரே இடத்தில் பல வலைப்பதிவர்களைப் பார்ப்பது அபூர்வம். 7 பேர் சேர்ந்ததே பெரிய விஷயம் என்று சொல்லவேண்டும்.

பாலாஜி, அதான் நம்ம 'குமுதம்', ச்சே, பா.பா. வீட்டில் இரவு சந்திப்பதாக ஏற்பாடு. நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து அவர் வீட்டுக்குப் போய் பெரிய கார் நிறுத்தக் களத்தில் இறங்கிய உடனே, அடுக்ககத்தில் நுழைவுவாயிலைக் கண்டு பிடிக்க என்ன வழி என்று செல்பேசியில் கூப்பிட, 'பாருங்க, வரிசையா டிஷ் ஆன்டென்னா இருக்கு பாருங்க, அதுதான் எங்க வீடு' என்றார். உள்ளூர் கேபிள் டிவி வினியோகஸ்தர் வீடு போல அந்த சன்னலுக்கு வெளியே அத்தனை தட்டுக்கள், நல்ல அடையாளம்!

உள்ளே போகும்பொதே யார் யார் வந்திருக்கிறார்கள் என்று விசாரித்தேன். 'நான் தான் பெயரிலி' என்று ஒருவர் வந்தார். அத்தனை சீக்கிரம் தானாக ஒத்துக்கொள்வதிலிருந்தே, இந்த ஆள் பெயரிலி இல்லை என்று உணர்ந்துகொள்ள முடிந்தது. பிறகு தான் யார் என்றும் சில பூனைப் பெயர்களைச் சொல்லி 'அந்தப் பெயர்களில் எழுதுபவர், முக்கியமாக மறுமொழிபவர், தாம் இல்லை' என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டார்.

தன்னைப்போலவே ஒரு புனை'பட'த்தை இணையத்தில் உலவவிட்டு ஏமாற்றினாலும், நேரில் அதைவிட இளமையாகக் கதாநாயகன் போல இருந்த ஒருவர், தான் தான் பாஸ்டன் பாலா என்றார், நம்ப வேண்டியிருந்தது. மனைவி முன் ரொம்ப தைரியமாக இருந்ததைப் பார்த்தால் ஒத்திகை எல்லாம் பலமாக இருக்கும் என்று தெரிந்தது. மகள் சூட்டிகையான குழந்தை, சிரித்துக்கொண்டே இருக்கிறாள். இங்கே ஒத்திகைக்கு வழி இல்லை.

பல இருக்கைகள் இருந்தும், புலிப் பொம்மை ஒன்றுக்குப் பக்கத்தில் இருந்த இருக்கைக்கு அருகே 'அவர்' உட்காரும்படி அமைந்தது தற்செயலாகத்தான் இருக்கவேண்டும். இதை மட்டும் படமெடுத்து இணையத்தில் போட்டால் போதும், 'இணையம் உள்ளவரை உம் புகழ் நிலைத்திருக்கும், உம் புலிச்சார்பு நிலைக்கு இதைவிட வேறு ஆதாயம் தேவையிருக்காது' என்று படம் எடுக்க எத்தனித்தபோதே அந்த ஆள் முகம் அறிவியல் புனைகதைகளில் வருவதுபோல மார்ஃப் ஆகி வேறு ஒரு பெரியவர் அங்கே இருந்தார். கேட்டால் டெம்ப்ளேட்டை மாற்றிவிட்டேன் என்றார், ப்ளாக்ட்ரைவ்வுக்குப் போய்விட்டேன் என்றார். விட்டுவிட்டேன்.

இதுநாள்வரை வலைப்பதிவுகளில் கேள்விப்படாத ஒருவர் ஆர்வமாக வந்திருந்து கலந்துகொண்டார். கலந்துரையாடலில் அவரின் பரந்த வாசக அனுபவம் தெரிந்தது. 'எதோ பெரிய விஷயம் பேசுகிறார்கள், நமக்கு சம்பந்தமில்லாத துறை' என்று சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன். மனிதர் புகுந்து விளாசினார். அவரும் தன் பங்குக்கு தன் பெயர் என்று ஒன்றைச் சொன்னார், அதை இங்கே சொல்லி என்ன ஆகப்போகிறது? ஆனால் இத்தனை ஆர்வமாக இருப்பதைப் பார்த்தால் 'ஏற்கனவே வலைப்பதிக்கிறவர்தான் இவர்' என்று உள்மனம் சொல்கிறது. அன்றைய தேதிக்கு இல்லையென்றாலும் இன்று கட்டாயம் வலைப்பதிவராகியிருப்பார், வாழ்த்துக்கள்.

ஆதிபதி...அதுதான் தமிழின் முதல் வலைப்பதிவர், நவன், அவரும் வந்திருந்து நாங்கள் அத்தனைபேர் அலட்டியதையும், முகம் சுளிக்காமல் கேட்டுக்கொண்டிருந்தார். நவன் மொத்தம் எத்தனை வார்த்தை பேசினார் என்று எனக்கும் பாலாஜிக்கும் கருத்து வேறுபாடு வரவே, 'இதுக்கெல்லாம் வாக்கெடுப்பு நடத்த முடியாது பாலாஜி' என்று சமாதானம் செய்ததில் அந்த சில வார்த்தைகளும் மறந்துபோனது.

பிறகு பேசினோம், பேசினோம், என்ன பேசினோம் என்று இன்று 4 மாதத்துக்குப்பின் சரியாக நினைவில் இல்லை, சொல்லமுடியவில்லை.

அடுத்து முக்கியமான வேலை, சாப்பாடு. அருமையான, அசத்தலான சாப்பாடு. இத்தனை சமையலையும் முன்பே முடித்துவிட்டு அமைதியாக எங்களுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த பாலாஜியின் மேல் பிரமிப்பான ஆச்சரியம் வந்தது. புனைபெயரில் சமையலுமா? சரிசரி, போனவேலையைக் கவனித்தோம். செவிக்கும் வயிற்றுக்கும் நல்ல வேலை. அடுத்தநாள் மெய்யப்பனாரின் நிலவறையில் மீண்டும் சந்திப்பது என்ற அறிவிப்புடன் அன்றைய கூட்டம் முடிந்தது. முடிந்த பிறகு நாங்கள் தங்கியிருந்த அறைக்குத் திரும்பி தூங்கப்போனோம்.

காலையில் எங்களுக்கு ஊர்சுற்றிக்காட்டுவதற்கு பாலாஜியும் பூனைக்காரரும் கூடவந்தார்கள். உலகப்புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகம், எம் ஐ டி எல்லாம் காட்டினார்கள். பாதாள ரயில் எல்லாம் காட்டினார்கள். -20 பாகை குளிரில் பத்து நிமிடம் கூட வெளியில் நிற்கமுடியவில்லை. அதனால் சுற்றுலாவை சிற்றுலாவாக்கிக்கொண்டு சீக்கிரமே திரும்பிவிட்டோம். நல்ல உடுப்பி ஓட்டல் சாப்பாடு, ஒரு வெட்டு வெட்டினோம். இந்திய வழக்கம் போல ரொம்ப தாமதமாக நிலவறைக்குப் போய்ச்சேர்ந்தோம்.

மீண்டும் விட்ட இடத்திலிருந்து பேச்சு தொடங்கியது. சும்மா மௌசையே க்ளிக்கிக்கொண்டிருகும் கைக்கு ஒரு grip தேவைப்பட, இதுதான் தோதுப்படும் என்று பச்சைக்கலரில் பீர் பாட்டல்களைக் கொடுத்தார் மெய்யப்பர். கையை ஆட்டி ஆட்டிப் பேசும்போது உள்ளே ததும்பும் பீர் சிந்தி தரைக் கம்பளம் பாழ்பட்டுவிட வாய்ப்பிருப்பதால் அதைக் குடித்தாகவேண்டிய கட்டாயம் எங்களுக்கு. ஒரு பாட்டல் காலியானதும் அடுத்த பாட்டலைக் கொடுக்கவேண்டிய கட்டாயம் மெய்யப்பனாருக்கு. பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்க, இன்னும் எத்தனை பாட்டல் உள்ளே வைத்திருக்கிறார் என்று சோதித்துப்பார்த்துவிடலாம் என்று நமக்குத் தெரிந்த ஒரே வேலையில் கவனமாக ஈடுபட முயன்றும், 'திரும்பவும் கார் ஓட்டவேண்டும், அப்படி இப்படி' என்று ஏமாற்றிவிட்டார்கள். 'ஆஹா, இந்தத் தீர்த்த யாத்திரை உண்டென்று நேற்று ஏன் சொல்லவில்லை, எல்லாரையும் பழம் என்று நினைத்து விட்டேனே' என்று பாலாஜி வீணாய்ப்போன நேற்றை எண்ணி வருந்தினார்.

அங்கும் நல்ல சாப்பாடு. மரக்கறிக்காரனான என்னைவிட மாமிச பட்சிணிகளுக்கு நல்ல வேட்டை என்று நினைக்கிறேன். வலைப்பதிவர்களின் மனைவியர்கள் தனியாக ஒரு மாநாடு நடத்திக்கொண்டிருந்தார்கள். இப்படியாக நடந்தது வலைப்பதிவர் சந்திப்பு.

புனைபெயர்களைப் பற்றிப் பேச்சு வந்ததிலும் ஒரு நம்பமுடியாத விஷயம், நான் தான் டைனோ என்ற பெயரில் எழுதுகிறேன் என்று விடாப்பிடியாக வாதிட்ட பாலாஜியும் பால்டிமோராரும். இருக்குமோ என்னமோ என்று என்னையே நம்பவைத்துவிடுவார்கள், அத்தனை (அசட்டு) நம்பிக்கை. எதுக்கும் டைனோவாக வந்து சொன்னால்தான் நம்புவார்கள். ம்ஹும், அப்பவும் நம்ப மாட்டார்கள். டைனோவும் நானும் ஒரே சமயத்தில் வந்து கலந்துகொண்டால்தான் நம்புவார்கள். அய்யா டைனோ, எங்கே இருக்கீங்க?

பின்குறிப்பு:
நியூஜெர்சி என்றா தலைப்புப் போட்டேன், அய்யய்யோ, இது பாஸ்டன் வலைப்பதிவர் சந்திப்பு. 4 மாதம் முன் நடந்தது. நடந்து முடிந்த அன்று சி.என்.என்னில் வரவேண்டியது. அந்த சுனாமி கலக்கிய கலக்கலில் இதைத்தூக்கிக் கடாசிவிட்டார்கள்.

பின்பின்குறிப்பு:
அப்படியானால் நியூஜெர்சி? ஹிஹி... அங்கே எத்தனைபேர் இருக்கிறார்கள் என்பதே தெரியாமல், கடைசி நேரத்தில் அறிவித்தேன். மூன்றுபேர் இருக்கிறார்கள் என்று தெரிந்தது. ஆனால் யாருக்கும் வர நேரம் வாய்க்கவில்லை என்று முன்னமே தகவல் கிடைத்தது, எனவே நான் மெதுவாக சரியான நேரத்துக்கு போய் என் வேலையை முடித்துக்கொண்டு வந்துவிட்டேன். ஒரு நண்பர் மட்டும் கட்டாயம் முயற்சிப்பதாக சொன்னார். அவரையும் சிரமப்படவேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

கடைசிக்குறிப்பு:
நண்பர்களைக் கேட்காமல் படம் போட்டதால் வேண்டுமென்றே சிறியதாக, பெயர் குறிப்பிடாமல் போட்டிருக்கிறேன். அவர்களாக விருப்பப்பட்டால் பெயர் சொல்லி மற்றவர்களுக்குப் புரியவைக்கலாம்.

காசி - clock 06:40:19 - சனி, 16.04.05 - பொது - 3844x - pencil நிரந்தர சுட்டி

RSS 2.0 ஓடை, பின்தொடர்பு, அச்சிடல், மின்மடலிடல்

  • மறுமொழிகளுடன் இந்த ஆக்கத்தின் ஓடை: RSS 2.0 comments feed
  • DISALLOWED (TrackBack)
  • இந்தப் பக்கத்தை நீங்கள் அச்சிட, மின்மடலிட இயலும்.

Local search நியூஜெர்சி வலைப்பதிவர் சந்திப்பு

No results found or search not configured.

Google search

No results found or search not configured.

மறுமொழிகள்:

மூர்த்தி சொன்னது:

கலக்கல்தான்!!! ம்ம்ம் தொடர்ந்து நடத்துங்கள்... நல்ல விசயங்களை(அவ்வப்போது பிராண்டையும்..பீர்) மாற்றி மாற்றிப் பேசுங்கள். வலைப்பூக்களின் தரம் உயரும். புத்துபுது பதிவர்கள் உருவாக இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

சனி, 16.04.05, 08:19:04 காசி சொன்னது:

//நல்ல விசயங்களை(அவ்வப்போது பிராண்டையும்..பீர்) //
மூர்த்தி, இது பாராட்ட கிண்டலா, சரியாப் புரியலையே?

சனி, 16.04.05, 09:52:14 DJ சொன்னது:

//இது பாஸ்டன் வலைப்பதிவர் சந்திப்பு. 4 மாதம் முன் நடந்தது. நடந்து முடிந்த அன்று சி.என்.என்னில் வரவேண்டியது//
இது சி.என்.என்னில் வராவிட்டாலும் இன்னொருத்தரின் வலைப்பதிவில் இருக்கின்றது. முக்கியமாய் அந்த நிலவறைப்படம். காசி, உங்களை அவர் 'ஜெயமோகன்' மாதிரி என்று அந்தப்படத்தின் பின்குறிப்பில் குறிப்பிட்டிருந்ததாய் ஞாபகம் :-). அதே படத்தில் நடுவில் நிற்பவர் யாரென்று நான் ஒன்றும் கூறமாட்டேன். நண்பரே! கழுத்தில் ஸ்ரையிலாய் மாட்டியிருக்கின்ற sunglassஐ முகத்தில் மாட்டியிருந்தால் ஓரளவிற்காவது தப்பித்திருக்கலாம் அல்லவா :-)?

சனி, 16.04.05, 11:57:23 prakash சொன்னது:

என்ன இது... புகைப்படத்தில் இருப்பவர்கள் யார் யார் என்று யாருமே சொல்ல மாட்டேன் என்கிறார்கள்? எனக்கு காசியையும், பாலாஜியையும் மட்டும் தான் அடையாளம் தெரிந்தது. ஆராச்சும் சொல்லுங்கப்பா....

சனி, 16.04.05, 15:46:11 துளசி கோபால் சொன்னது:

அன்புள்ள காசி,

ஃபோட்டோவிலே யார் யார் யார்ன்னு பேர் தெரியாட்டி இங்கே எனக்கு மண்டை உடையக்கூடிய சாத்தியதை இருக்கு!

வீணா அந்தப் பழியைச் சுமக்கப் போறீங்களா?:-)

என்றும் அன்புடன்,
துளசி.

சனி, 16.04.05, 16:07:48 dyno சொன்னது:

என்னை(யும்) நினைவில் நிறுத்தியிருபவர்கள் இருக்கிறார்களா?!
ஆமா இது பாஸ்டன் சந்திப்பா? ஜெர்சி சந்திப்பா?

.:டைனோ:.

சனி, 16.04.05, 18:50:45 karthikramas சொன்னது:

காசி நல்லது செய்தீர்கள். வலைபதிவுலகத்தில் பல கதவுகளையும் (சில் சன்னல்களையும்) திறந்த அந்த வரலாற்றில்ப் பொறிக்க்ப்படவேண்டிய சந்திப்பை இப்பவாவது இப்படி பதிவு செய்தீர்களே , அது குறித்து மிக்க மிக்க மகிழ்ச்சி.

காசிக்கு வலப்பக்கம் மப்பாக நிற்கும் ஜிப்பாவலாதான் கார்த்திக்ராமஸ். யாரும் முடியைப் பிய்த்துகொள்ளவேண்டாம். ;-) காசி யாருன்னா, எனக்கு இடப்பக்கமாக நிற்பவர்.

டீ ஜே, கழுத்திலே மாட்டினதால் நீர் தப்பித்தீர்,

டைனோ, என்னைய்யா இது! பேய் படத்திலே வர்ற பேய் மாதிரி இப்படி வந்து வந்து மறையறீர்.
எந்த முகமூடியில எழுதுறீர்னு சொன்னால் ரெகுலராவாவது படிப்போம் இல்ல. ;-)

என் போட்டோவை இணையத்திலே போட்டதால் காசியை 1 மில்லியன் டாலருக்கு நான் 'சூ' செய்யப்போகிறேன்.

சனி, 16.04.05, 20:02:12 காசி சொன்னது:

DJ //நண்பரே! கழுத்தில் ஸ்ரையிலாய் மாட்டியிருக்கின்ற sunglassஐ முகத்தில் மாட்டியிருந்தால் ஓரளவிற்காவது தப்பித்திருக்கலாம் அல்லவா :-)?//

karthikramas //டீ ஜே, கழுத்திலே மாட்டினதால் நீர் தப்பித்தீர்,//

எங்கப்பன் நிலவறையில் இல்லைன்னு ஒரு ஆள் கூவிட்டு,

//என் போட்டோவை இணையத்திலே போட்டதால் காசியை 1 மில்லியன் டாலருக்கு நான் 'சூ' செய்யப்போகிறேன்.//

இப்ப வந்து என்னிடம் சூ..மந்திரக்காளி போடுது!

ஒரு ஆள் புதிர் அவிழ்ந்தது. இனி அடுத்தவர் தொடரலாம்.

(யாராவது கைக்குக் கிடைத்ததை எடுத்து மானிட்டரை அடிக்கப்போகிறார்கள்!)

டைனோ அப்ப இங்க சுத்திட்டுத்தான் இருக்கீங்களா?

பிரகாஷ், துளசி, என் கையில் ஒண்ணும் இல்லை:P

சனி, 16.04.05, 22:35:25 காட்சி சொன்னது:

பாலாஜி, பாலாஜி வாரிசு, நவன் படம் இரண்டு
காசியின் வாரிசும் கந்தையரின் பேரனும் நடத்திய மகாநாடு மூன்றாவது படம்.
தோள் பாக்கு, காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வாரிசு, கூடவே கூட்டி வந்த செர்ரி பாடிகாட்டு படம் நான்கு. (காசி, 90 டிகிரியிலே படத்தைத் திருப்பிப் போட்டிருக்கலாம்; தலையைத் திருப்பிக்கொண்டே பார்த்திருக்கலாம் ;-))

கடைசிப்படத்திலே, Nashua மெய்யப்பன், boston வேல்முருகன் கூட

சனி, 16.04.05, 23:22:21 bsubra சொன்னது:

அடுத்த பாஸ்டன் சந்திப்பு எப்பங்க ;-)

ஞாயிறு, 17.04.05, 09:06:05 annon சொன்னது:

dj, this photo can be used for .... you know what for
clue what comes after matriculation

ஞாயிறு, 17.04.05, 10:03:38 கார்த்திக்ராமஸ் சொன்னது:

அடடே தப்பா சொல்லிவிட்டேன் மப்பிலே, மூன்றாவது படத்தில் காசியின் குமரிக்கு அருகில் அமைதியாய் வலைப்பதிவர் சந்திப்பை வேடிக்கை பார்க்கிறாரே அவர்தான் கார்த்திக்ராமஸ்

ஞாயிறு, 17.04.05, 12:43:58 மூர்த்தி சொன்னது:

அன்புள்ள காசி...

இதில் கிண்டல் செய்ய என்ன இருக்கிறது???

வாழ்த்துக்கள்தான்! வலைப்பதிவர் சந்திப்புக்கான இடங்களையும் பீரின் பிராண்டையும் மாற்றுமாறு பரிந்துரைத்தேன்.... ம்.. அங்கல்லாம் பீர் கெடைக்குது... இங்க...

இன்னும் எனக்கு படங்களில் இருப்பவர் யார் யார்னே தெரியவில்லை. காசி, பாலாஜி மட்டும் தெரிகிறது. மீதிப்பேரை தெரியவில்லை.

திங்கள், 18.04.05, 00:26:50 மதி கந்தசாமி சொன்னது:

இரண்டாவது படத்தில் இருக்கிற 'சின்னப் பையன்' ஆதி வலைப்பதிவர் நவன்???

===
மூன்றாவது படத்தில், இளம் வலைப்பதிவர் தமிழ்மணத்தின் வருங்கால நிர்வாகியோடு பேச்சுவார்த்தை நிகழ்த்துகிறாரா? ;)
===
கடைசிப் படத்தில் மூன்று கஞ்சிக்குடியர்கள் தெரிகிறார்கள். அவர்களும் காசியும் போக கடைசியில் நீலச் சட்டையுடன் 'ஏவியெம் சரவணன்' பாணி கைகட்டுடன் நிற்பவர் யார்? தெரியலய்யே!!!
===
கொசுறு: டைனோ வணக்கம்!!! பார்த்து நாளாச்சு. இங்கனயே சுத்திக்கிட்டிருக்கீங்க போல. ஒரு வலைப்பதிவு தொடங்கி எழுதுறது. அந்த சினிமா கட்டுரைகளையும் கணினி தொடர்பான கட்டுரைகளையும் தொடரலாமில்ல?

திங்கள், 18.04.05, 00:35:27 prakash சொன்னது:

முதல் புகைப்படம், இடமிருந்து வலமாக இன்னார் இன்னார், இரண்டாவது புகைப்படம் இன்னார் இன்னார் ங்கற மாதிரி யாரும் தெளிவாச் சொல்ல மாட்டங்கறாங்களே....என்னமோ போங்க....

திங்கள், 18.04.05, 02:41:04 அல்வாசிட்டி.விஜய் சொன்னது:

முதல் படத்தில் இருப்பது புலி பொம்மை, புத்தக அலமாரி, கிறிஸ்துமஸ் மரம்.

இரண்டாவது படத்தில் இருப்பது எதோ ஒரு அலமாரி, டைனிங் டேபிள் அதுக்கு மேல சாப்பாடு சட்டி, வாட்டர் கேன்.

மூன்றாவது படத்தில் ஒரு கவுச்சும் இரண்டு குழந்தைகளும், இரண்டு கைகளும்.

நான்காவது படத்தில் ஆப்ரகாம் லிங்கனோ யாரோடைய சிலை.

ஐந்தாவது படத்தில் எரியும் லைட்டும், சுவற்றில் மாட்டப்பட்ட சித்திரங்களும்.

பின்னே அங்கிருக்கிற மனசாளுங்களை தெரியலேன்ன தெரிஞ்சத சொல்லிக்கிட வேண்டியது தான். அடபோங்கப்பா ரொம்ப தான் பிகு பண்ணிக்கிறீங்க :-)

திங்கள், 18.04.05, 03:07:21 Karthikramas சொன்னது:

இணைப்பது நல்லதெனப்பட்டதால் இங்கே(யும்)
http://wandererwaves.blogspot.com/2005/04/blog-post.html...

திங்கள், 18.04.05, 10:14:33 Meyyappan சொன்னது:

காசி,
புகைப்படத்திற்கும் பதிவிற்கும் நன்றி. மீண்டும் சந்திக்கலாமே. -20 லாம் போயே போச்சு. கோடையில் வாங்க. இந்த முறை இன்னும் கொஞ்சம் பேர் கலந்துகொள்வார்கள். நன்றாக இருக்கும்.

திங்கள், 18.04.05, 10:48:54 karupy சொன்னது:

காசி ஒரு பெண்கள் கூட வரவில்லை. அதுபற்றித் தாங்கள் அக்கறைப்படவுமில்லை. அடுத்து எப்போது சந்திக்கப் போகின்றீர்கள். கறுப்பி நிச்சயம் கலந்து கொள்ளுவாள். இந்த ஆணாத்திக்க வாதிகள் சம்மதித்தால்? ஹ ஹ ஹ

திங்கள், 18.04.05, 11:09:08 Mathy Kandasamy சொன்னது:

சுமதி,

ஒரேயடியாக அப்படிச் சொல்லிவிட முடியாது!

எத்தனை பெண்கள் வலைபதிகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

எனக்குத் தெரிந்து இப்போதுதான் அமெரிக்க கிழக்குக் கடற்கரையோரத்திலிருந்து ஒருவர் வலைபதிகிறார்.
பத்மா அர்விந்த்.

வா்ஷிங்டன் டிசி'யிலிருந்து தாரா.

பத்துப் பதினைந்து பெண்கள்தான் மொத்தமாக இருக்கிறோம்.

நீங்கள் உங்கள் தோழிகளைக் கூட்டிக் கொண்டு வர முயற்சிக்கலாம். தெரிந்த பெண்களையும் வரச்சொல்லி ஊக்குவிக்கலாம்.

ஜூன் மாதம் உங்க ஊர்ல ஒரு சந்திப்பு நடத்த வாய்ப்பு இருக்கு. தான்யா, டிஜே, வெங்கட்'கிட்ட எல்லாம் பேசணும் இனிமேல்தான்.

-மதி

திங்கள், 18.04.05, 11:18:45 காசி சொன்னது:

மூர்த்தி: //வலைப்பதிவர் சந்திப்புக்கான இடங்களையும் பீரின் பிராண்டையும் மாற்றுமாறு பரிந்துரைத்தேன்.... ம்.. அங்கல்லாம் பீர் கெடைக்குது... இங்க...//
ஏன் மூர்த்தி, சிங்கையிலே அதுக்கும் கூடத் தடையா?

மதி: //மூன்றாவது படத்தில், இளம் வலைப்பதிவர் தமிழ்மணத்தின் வருங்கால நிர்வாகியோடு பேச்சுவார்த்தை நிகழ்த்துகிறாரா? //

அரசியலிலும் வாரிசு, சினிமாவிலும் வந்துவிட்டது, வியாபாரம்/தொழில் பற்றி சொல்லவே வேண்டாம். இங்கேயும் வாரிசா? (அந்தப் பொண்ணை தமிழ்பேச வைக்கவாவது வீட்டில் சன் டீவி வேணும் போல இருக்கு:(, இது நிர்வகித்தா அதுக்குப்பேரு 'டமில்மனம்' ஆகத்தான் இருக்கும்!)

பா.பா.: //அடுத்த பாஸ்டன் சந்திப்பு எப்பங்க?//

மெய்யப்பன்: //மீண்டும் சந்திக்கலாமே. -20 லாம் போயே போச்சு. கோடையில் வாங்க. இந்த முறை இன்னும் கொஞ்சம் பேர் கலந்துகொள்வார்கள். நன்றாக இருக்கும்.//

இன்னொரு சந்திப்பு கோடையில் நடத்தலாம். நான் இருந்தால் கலந்துகொள்வேன்.

கறுப்பி: //காசி ஒரு பெண்கள் கூட வரவில்லை. அதுபற்றித் தாங்கள் அக்கறைப்படவுமில்லை. அடுத்து எப்போது சந்திக்கப் போகின்றீர்கள். கறுப்பி நிச்சயம் கலந்து கொள்ளுவாள். இந்த ஆணாத்திக்க வாதிகள் சம்மதித்தால்? ஹ ஹ ஹ//

என்ன ஹ..ஹ..ஹ..? என்னவோ நாங்க சேத்துக்காதமாதிரி. மதி சொன்னதேதான். இல்லை. வல்லை. எங்கள் மனைவியர் யாருக்கும் இதில் ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை. நாங்கள் என்ன செய்ய? கிடைச்ச இடத்தில் கத்தி வீசிடுவீங்க போலிருக்கு!

திங்கள், 18.04.05, 11:31:02 karupy சொன்னது:

ம்.. மதி பாக்கலாம். எனக்கு டிசேயும் நீங்களும்தான் புதுமுகம். நிறம்ப புதுமுகம் இருந்தால் சுவாரஸ்யமாக இருக்கும். இல்லையா?
வெறுமனே இருந்து இலக்கிய ஆராய்வு எல்லாம் எனக்குச் சரிவராது. நான் மெல்ல காசி கூட்டம் பக்கம் சாயப்போறன் பீர் எல்லாம் இருக்காம். நல்ல மாங்காய் ஊறுகாயும் இருக்கா? ச்சாசாசாஆஆஆ

அதுசரி காசி
//எங்க மனைவியர் யாருக்கும் இதில் ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை.\\
தற்போது எத்தனை மனைவியர் இருக்கு?
கத்தி வீசிடுவீங்க போலிருக்கு!

திங்கள், 18.04.05, 11:46:46 karupy சொன்னது:

காசி என்ன சத்தத்தைக் காணேலை. கறுப்பி பகிடிக்குக் கேக்கேலை சீரியஸாக் கேக்கிறன் சொல்லுங்கோ அடுத்த சந்திப்பு எப்போது? எங்கே? யார் யார் வருவார்கள் விபரம் வேண்டும்.

செவ்வாய், 19.04.05, 12:19:50 காசி சொன்னது:

//வெறுமனே இருந்து இலக்கிய ஆராய்வு எல்லாம் எனக்குச் சரிவராது. நான் மெல்ல காசி கூட்டம் பக்கம் சாயப்போறன் பீர் எல்லாம் இருக்காம்.//

இப்படித்தான் இருக்கணும். இலக்கியம் பேசுறவங்க பேசட்டும். நம்ம இலக்கிலே நாம் குறியாய் இருப்போம்.

//நல்ல மாங்காய் ஊறுகாயும் இருக்கா? ச்சாசாசாஆஆஆ//
பீருக்கு மாங்கா ஊறுகாயா? நான் கேட்டதில்லையே. பீருக்கு காரப்பொரி, உருளைக்கிழங்கு சிப்ஸ் மாதிரியானதுதான் நல்லா இருக்கும்.

//தற்போது எத்தனை மனைவியர் இருக்கு?//
பொதுவில் சொல்லமுடியாத கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது:(

//அடுத்த சந்திப்பு எப்போது? எங்கே? யார் யார் வருவார்கள் விபரம் வேண்டும்.//
விபரம் தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா :P

செவ்வாய், 19.04.05, 13:15:34 karupy சொன்னது:

ம் நான் என்னத்தைக் கண்டன் காசி. ஊரில இருந்தமாதிரியே இங்கையும் மாங்காய் ஊருகாய்தான். நீங்க சொல்லீட்டீங்க இனி சிப்ஸ் காரமுறுக்கு ரை பண்ணிப் பாக்கிறன்.

அது சரி ரொறொண்டோ சந்திப்பிக்கு அமெரிக்கர்களும் வருகின்றார்களா?

செவ்வாய், 19.04.05, 13:41:41

மறுமொழியிடும்போது கவனிக்க:

விரும்பினால் மறுமொழியினூடே கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தலாம்:

மறுமொழியிட:

Comments must be approved before being published. Thank you!

This item is closed, it's not possible to add new comments to it or to vote on it