சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்

வெள்ளி, அக் 14, 2005

குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய கடிதம்

சென்ற ஆண்டு செப்டம்பரில் தமிழ் வலைப்பதிவுகளின் நிலை பற்றியும், அறிவியலாளர், சமூகத்தோடு தொடர்புகளைப் பேணுவதில் ஆர்வம் காட்டுபவர், தமிழில் கவிதைகள் எழுதுபவர் என்ற வகையில், அவரையும் வலைப்பதிக்க அழைத்து ஒரு மடல் எழுதினேன். இன்றுவரை மடல் கிடைத்ததத்ற்கான ஒப்புகையோ, அவரின் பதிலோ கிடைக்கவில்லை. மடலில் கொஞ்சம் பெருமையடிப்பும் தமிழ்மணம் தளத்துக்கு விளம்பரவாசமும் தெரியலாம், ஆனாலும் உதவியாளரை விட்டுப் பதில் எழுதச்சொல்லக்கூட முடியாமல் போகும் அளவுக்கு இது ஒதுக்கத்தக்கதா என்று தெரியவில்லை. பிறந்தநாள் காணும் அப்துல் கலாம் அவர்களுக்கு வாழ்த்து சொல்ல நண்பர்கள் அவரின் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருப்பது கண்டு இதை பொதுவில் சொல்லத்தோன்றியது. அவ்வளவுதான்.  (ஒரு நினைவூட்டு மடலும் அனுப்பினேன், அத்ற்கும் பதில் இல்லை. நான் அனுப்பிய முகவரி: presidentofindia@rb.nic.in

எழுதிய மடலை இங்கே கொடுக்கிறேன்


[மேலும் வாசிக்க...]

தமிழ்மணம் தள நடவடிக்கைகள் பற்றி சில அறிவிப்புகள்.

1. தமிழ்மணம் திரட்டி இயங்கும் விதம்:

திரட்டிப் பட்டியல் என்பது வலைப்பதிவுகள் பட்டியலிலிருந்து தனியாகப் பராமரிக்கப்படுகிறது. பல காரணங்களால் இது வலைப்பதிவுகள் பட்டியலைவிட சிறியதாக இருக்கும். பல மாதமாக எழுதப்படாத பதிவுகள், தொழில்நுட்பக் காரணக்களால் திரட்டப்படமுடியாத பதிவுகள், தீவிரவாதம் ஆபாசம் போன்றவற்றிற்காக விலக்கப்பட்டவை, இத்யாதி இந்த திரட்டிப் பட்டியலில் இடம்பெறா.

ஒவ்வொரு 20 நிமிடத்துக்கு ஒருமுறை திரட்டப்படுவது பல சமயங்களில் தடையின்றி இயங்காமற் போகலாம். இத்ற்கு இணையத்தொடர்பின் போக்குவத்து நெரிசல் ஒரு முக்கியக்காரணம். அந்த சமயங்களில், எழுதிவிட்டு பல மணி நேரமாகியும் 'வரவில்லையே' என்று காத்திருப்பது மகிழ்வான நிகழ்வில்லைதான். இந்த நிலை நெரிசல் சரியானதும் தானாகவே சீராகிவிடும். பெரும்பாலும் சில மணிநேரத்தில் இது சரியாவதைப் பார்த்திருக்கிறோம். ஆனாலும் இதற்கு சில சமயம் ஓரிரு நாட்கள் கூட ஆகலாம். எனவே பொறுமையைக் கடைப்பிடிக்கக் கோருகிறோம்.

இந்த பிரச்னைக்கு மாற்று ஏற்பாடுகள் ஏற்கனவே சோதனையில் இருக்கின்றன. நடைமுறைக்கு வர சிலகாலம் பிடிக்கலாம். அதுவரை ஒத்துழைப்பை நாடுகிறோம்.

2. புதிய பதிவுகள் சேர்க்கை முறைமை:

இதிலும் தற்போது உள்ள முறையில் இருக்கும் குறைகளைக் களைந்து புதிய மேம்பட்ட முறை கொன்டுவரப்படுகிறது. இது இன்னும் ஒரு வாரத்துக்குள் நடைமுறைப்படுத்தப்படும். அத்ற்குப்பின் இதில் தொய்வு இருக்காது.

3. தமிழ்மணம் தளத்துக்குத் தொடுப்புக் கொடுத்தல்:

இதை இன்னும் பலர் (~100) செய்யவில்லை. இலவசமாக அளிக்கப்படும் இந்த சேவையில் தன்னை இணைத்துக்கொள்ளும் வலைப்பதிவுகள் தொடுப்பு (லிங்க்) கொடுப்பது விரைவில் கட்டாயமாக்கப்படும். எனவே இப்போது கொடுக்காதவர்கள் விரைவில் செய்துவிடுங்கள்.

4. மேம்பட்ட சேவைகள்:

வகைபிரித்தலிலிருந்து, இயங்கு எழுத்துரு வரை பல மேம்பட்ட சேவைகள் அளிப்பது திட்ட அளவில் உள்ளது. இதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5. மத துவேஷ பதிவுகள் விலக்கம்:

சமயம் பற்றிய நேர்மறையான பதிவுகள் வரவேற்கத்தக்கவை. ஆனால் அடுத்தவர் சமயத்தை கீழ்த்தரமாக விமர்சிக்கும் வகையில் எழுதப்படும் பதிவுகள் தமிழ்மணம் திரட்டியிலிருந்து விலக்கிவைக்கப்படும். ஏற்கனவே இன்று ஒன்று விலக்கப்பட்டுள்ளது. அனைவரும் புரிந்துகொன்டு ஒத்துழைக்க வேன்டுகிறோம்.

நன்றி,

தமிழ்மணம்.காம்

ஞாயிறு, அக் 02, 2005

கோவை வலைப்பதிவர்/இணைய நண்பர் சந்திப்பு

அழைப்பை ஏற்று வந்து கலந்துகொண்ட வலைப்பதிவர்கள் (பாலாக்கள், பிரகாஷ், ராஜா) நான்கு பேருக்கும், வலைப்பதிவரல்லாத சிவகுமார் (தமிழ்பயணி.காம் இணையதளம் நடத்துபவர்) மற்றும் என் நெடுநாள் நண்பர் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரனுக்கும் நன்றி. முக்கியமாக நாமக்கல்லிலிருந்து இதற்கென (4 மணிநேரம் ஒருவழி) பயணித்துவந்த ராஜாவின் ஆர்வம் பாராட்டத்தக்கது.

அனைவரும் இன்றையதேதியில் தீவிர வலைப்பதிவரல்லாததாலோ, முதன்முறையாக சந்திப்பதாலோ 7 மணிக்கு தொடங்கிய சந்திப்பில் 9 மணிவரை தமிழ் இணையம்/வலைப்பதிவு தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை. பொதுவான விதயங்களும் அறிமுகமுமாகவே பொழுது கழிந்தது. சிவகுமார் விடுப்புப் பெற்று சென்றும் விட்டார். பிறகே தமிழ் இணையம் பற்றிப் பேச்சு திரும்பியது. அதில் முக்கியமாக ஒரு விதயம் நெடுநேரம் விவாதிக்கப்பட்டது. அதாவது தமிழ் குறியேற்றம், யுனிகோடு, தரநிர்ணயம் சம்பந்தமாக தமிழக அரசின் முனைப்பை தூண்டும் விதமாக நேரமும், ஆர்வமும், அறிவும் உள்ள தமிழிணையப் பயனாளர்கள் தன்னார்வப் பணியாக எடுக்கவேண்டிய சில கூட்டுமுயற்சிகள் பற்றி விவாதிக்கப்பட்டது. முயற்சிகளை பொதுவில் 'சொல்வதைவிட' 'செய்வதில்' உள்ள முக்கியத்துவமும் கவனத்தில் கொள்ளப்பட்டது. முயற்சிகள் நடப்புக்கு வரும்பொது மேலும் விளக்கமான தகவல்கள் வெளியாகலாம்.

இரவு 12 மணியளவில் பாலமுருகன் விடைபெற்றும், மீண்டும் மீண்டும் காப்பியை உறிஞ்சியபடி மீதி ஐவரும் 1:30 வரை பேசினோம். பேசியவரை நிறைவாகவும், இன்னும் பலதையும் பேச நேரம் போதவில்லையே என்ற ஏக்கத்துடனும் சந்திப்பு நிறைவுபெற்றது. ராஜாவும் பிரகாஷும் இன்னும் விளக்கமாகப் பதிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

படங்கள்:

சுபாஷ் சந்திரன், 'சோடாபாட்டில்' பாலா, 'கலெக்டர்' பாலா

நாமக்கல் ராஜா, 'தமிழ்பயணி' சிவகுமார்

ஐகாரஸ் பிரகாஷ், காசி

வெள்ளி, செப் 30, 2005

கோவைப் பகுதி தமிழ் இணைய/வலைப்பதிவு நண்பர்கள் சந்திப்பு

கோவை மற்றும் சுற்றுப்புறங்களில் வசிக்கும் (அல்லது வார இறுதிக்கு வருகைதரும்:-D) தமிழ் இணைய/மென்பொருள்/வலைப்பதிவு ஆர்வலர்கள் நேரில் அளவளாவ ஒரு வாய்ப்பாக ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து கோவைக்கு சொந்த வேலையாக வந்திருக்கும் ஐகாரஸ் பிரகாஷ்,  கோவையிலிருந்து தூரமாகவே இருந்தாலும் பங்கேற்க பெரும் ஆர்வமுள்ள நாமக்கல் ராஜா, பல நாளாய் தமிழில் வலைப்பதிக்காவிட்டாலும் (அதென்ன அயல்நாட்டில் இருந்த போது முடிந்தது, தாய்நாட்டிற்கு வந்தபின் முடிவதில்லை?'- என்னையும் சேர்த்துத்தான்!) நிகழ்வுகளைக் கவனித்துவரும் சோடாபாட்டில் பாலா,  படங்களால் மனதைத்தொட்ட கலெக்டர் பாலா, இவர்களுடன் கோவைக்கு வந்து 4 மாதம் ஆகியும் இன்னும் வலைப்பதிக்காமல் ஒளிந்துகொண்டிருக்கும் அடியேனும்;-) இப்போதைக்கு உறுதிசொல்லியிருக்கிற நண்பர்கள்.

இன்னும் கோவைப்பகுதியில் இருந்து தமிழ் இணையத்தில் வாசகராக, குழுக்களில் உறுப்பினராக, வலைப்பதிவராக பங்கேற்கும், எனக்குப் பெயர் தெரியாத நண்பர்கள் வேண்டி விரும்பி அழைக்கப் படுகிறார்கள்.

இடம்: மேட்டுப்பாளையம் சாலை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி அருகில் உள்ள காசியின் இல்லம்.
நேரம்: அக்டோபர் 1 சனிக்கிழமை மாலை 6 முதல் 10 வரை (அவரவர் வசதிபோலக் கலந்துகொள்ளலாம்). மேலும் விபரங்களுக்கு 98941 11554 என்ற செல்பேசியில் அழைக்கலாம்.

இணையத்தில் மட்டுமே அறிந்த நண்பர்களை நேரில் பார்க்கவும், புது நண்பர்களை அறிந்துகொள்ளும் ஆவலுடனும் இருக்கிறோம்.

செவ்வாய், ஆக 23, 2005

தமிழ்மணம் - 365

அன்புள்ள நண்பர்களே, வணக்கம்.

தமிழ் வலைப்பதிவுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக தமிழ்மணம் வலைவாசல் தொடங்கி இன்றோடு ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டது. இந்த மகிழ்ச்சியை உங்கள் அனைவரோடும் சேர்ந்து கொண்டாடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

இந்த ஒரு வருடத்தில் 20,000 க்கும் மேற்பட்ட ஆக்கங்கள் திரட்டப்பட்டிருக்கின்றன. இன்று பட்டியலில் உள்ள பதிவுகளின் எண்ணிக்கை சுமார் 150-லிருந்து 700ஐத் தொட்டுவிட்டது. (இவற்றில் சுமார் 500 மட்டுமே திரட்டிப்பட்டியலில் உள்ளன.) இந்த வலைவாசல் முதல் 6 மாதங்களாக நாளொரு மேனியும் பொழுதொரு மாற்றமுமாக வளர்ந்தே இன்று நாம் காணும் இந்த வடிவத்தைப் பெற்றுள்ளது. கடந்த 6 மாதங்களாகப் பெரிய அளவில் முன்னேற்றங்கள் நடக்கவில்லை என்பதில் உங்களைப்போலவே எனக்கும் மனத்தாங்கல்கள் உள்ளன. ஆனால் கடந்த 2 வாரங்களாக சில முயற்சிகளில் இறங்கியிருக்கிறேன். இதன்மூலம் மீண்டும் உத்வேகத்துடன் தமிழ்மணம் வலைவாசல் மேம்படுத்தப்படும், பல புதிய அமைப்பு/வசதி மாற்றங்கள் இனி வரும் வாரங்களில் செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த 4 மாதங்களாக என்னோடு தோள்கொடுத்து தமிழ்மணம் நிர்வாகப்பணிகளில் உதவி வரும் செல்வராஜ், மதி கந்தசாமி மற்றும் பரிமேலழகர் ஆகியோருக்கு நம் அனைவர் சார்பாகவும் நன்றி சொல்லவும் இந்த வாய்ப்பைப் பயனபடுத்திக்கொள்கிறேன்.

சில நாட்களாக சமயம் சார்ந்த விதயங்களில் ஒருவர் மற்றவரின் கடவுளரைத் தாக்கி எழுதுவது சற்று தரம் தாழ்ந்து வருவதைக் காண நேரிடுகிறது. இத்தகைய பதிவுகள் தொடருமானால் சம்பந்தப்பட்ட பதிவுகள் தமிழ்மணம் சேவையிலிருந்து விலக்கி வைக்கப்படும் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். அத்தகைய நிலைக்கு தள்ளவேண்டாம் என்றும் சக வலைப்பதிவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்ந்த உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் தமிழ்மணம் சார்பாக நன்றி.

அன்புடன்,

-காசி

புது இடுகைகள்:

18.12.2005

24.10.2005

23.10.2005

19.10.2005

18.10.2005

பழைய இடுகைகள்:

13.06.2005

09.05.2005

25.04.2005

20.04.2005

16.04.2005